

தமிழகத்தில் 234-வது, அதாவது கடைசி தொகுதியாக கிள்ளியூர் உள்ளது. இத்தொகுதியில் 2,52,770 வாக்காளர்கள் உள்ளனர். கடந்தமுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜேஷ்குமார் 77,356 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதற்கு அடுத்த இடத்தை பெற்ற பாஜகவின் பொன் விஜயராகவன் 31,061 வாக்குகளும், அதிமுகவின் மேரி கமலாபாய் 25,862 வாக்குகளும், தமாகாவின் குமாரதாஸ் 13,704 வாக்குகளும் பெற்றனர்.
தற்போது 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், கிள்ளியூர் தொகுதியில் இருமுனை போட்டியே நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் ராஜேஷ்குமாருக்கும், தமாகா சார்பில் இரட்டை இலை சின்னத்தில் களத்தில் நிற்கும் குமாரதாசின் மகன் ஜூட் தேவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
சாதகம்- பாதகம்
நாடார்கள், மீனவர்களின் வாக்குகள் அதிகம் கொண்ட தொகுதி இது. ஏற்கெனவே கடந்த முறை வென்ற ராஜேஷ்குமார் தொகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்பது அவருக்கு கூடுதல் பலம். அதேநேரம் ஆளும் கட்சி தயவு இல்லாததால் கடந்தமுறை அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பது குறையாக உள்ளது. தொகுதி மக்களுக்கு பிரச்சினை என்றால் எந்நேரமும் களத்தில் நிற்பவர் ராஜேஷ்குமார். திமுக வாக்குடன், கிறிஸ்தவர்கள் ஆதரவும் இவருக்கு இத்தொகுதியில் உள்ளது
தமாகா சார்பில் போட்டியிடும் ஜூட் தேவ், இத்தொகுதியில் 4 முறை வெற்றிபெற்ற குமாரதாசின் மகன் என்பதால், அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவருக்கு இது தான் முதல் தேர்தல் என்றாலும், கூட்டணி கட்சியான பாஜகவுக்கு இத்தொகுதியில் அதிக வாக்குகள் உள்ளன. இதுதவிர அதிமுகவின் ஆதரவும் உள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
கிள்ளியூர் தொகுதியை பொறுத்த வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் வராதது பெரும் குறையாக உள்ளது. தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் தடுப்புச் சுவரை அகலப்படுத்த வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. இப்பணி தொடங்கப்பட்ட நிலையில் தேர்தல் வந்துவிட்டது. கேரளாவில் இருந்து வரும் ஏ.வி.எம். கால்வாயை மீண்டும் சீரமைத்து நீர்வழி போக்குவரத்தை தொடங்க வேண்டும்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட விளாத்துறை நீரேற்று திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சிற்றாறு பட்டணங்கால்வாய் வழியாக கடைவரம்பு பகுதிக்கு தட்டுப்பாடின்றி பாசன நீர் வழங்க வேண்டும். தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
கிள்ளியூர் தொகுதியில் நிறைவேற்றிய பணிகளைக் கூறி ராஜேஷ்குமார் வாக்கு சேகரித்து வருகிறார். தமாகாவின் ஜூட் தேவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.