

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியிலுள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருச்சி மாநகர போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பின்னர் இவ்வழக்கு 2012 ஜூன் மாதம் சிபிசிஐடிக்கும், அதன்பின் 2017 நவம்பரில் சிபிஐக்கும் மாற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கில் தீவிர விசாரணையைத் தொடங்கினர். ஆனால் காலப்போக்கில் அவர் களும் இதனைக் கிடப்பில் போட்டுவிட்டனர். ராமஜெயம் மறைந்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், இதுவரை அவரது மரணத்துக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்த விவரங்களை கண்டறிய முடியவில்லை.
இதுகுறித்து கே.என்.நேருவிடம் கேட்டபோது அவர் கூறியது:
கே.என்.ராமஜெயம் மறைந்தது தொடர்பாக 9 ஆண்டுகளாக உள்ளூர் போலீஸ், தனிப்படை, சிபிசிஐடி, சிபிஐ என பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியும்கூட, இதுவரை குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது வேதனை யளிக்கிறது. என் தம்பியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்த உண்மையை தெரிந்து கொள்வதற்காக 9 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம். தம்பியின் மரணத் தால் ஏற்பட்டுள்ள இழப்பு, அதற் குப்பிந்தைய நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய மனவேதனை எங்களைப் பாடாய்படுத்துகிறது. தினம்தினம் துடிக்கிறோம்.
இத்தேர்தலுக்குப் பின் நிச்சயம் இதற்கு விடிவு கிடைக் கும். திமுக ஆட்சியில் இவ் வழக்கின் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எக நம்புகிறோம் என்றார். இவ்வாறு கே.என்.நேரு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுதார்.
இதுகுறித்து கே.என்.நேரு குடும்ப வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் கூறும்போது, ‘‘இந்த ஆட்சியில் எதுவும் நடக்காது என்பதை புரிந்து கொண்டதால், மீண்டும் மீண்டும் நீதிமன்றம் சென்று அதன்வழியாக வழக்கு விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்த்து விட்டோம். நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். அதன்பின் இவ்வழக்கின் விசாரணையிலும் முன்னேற்றம் கிடைக்கும் என நம்புவதால், இப்போது அமைதியாக இருக்கி றோம்’’ என்றார்.