

குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
ஏசுவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது.
தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, இந்த நாளில் ஏசு கிறிஸ்து தனது சீடர்களுடன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தபோது மக்கள் ஆலிவ் மரக்கிளைகளை கையில் ஏந்தி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததாக பைபிளில் கூறப்பட்டுள்ளது.
இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத் தோலை பவனி நடைபெறுகிறது.
அதன்படி தூத்துக்குடி திரு இருதய பேராலயத்தில் (சின்னக்கோவில்) நடைபெற்ற குருத்தோலை பவனிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை வகித்தார்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்றனி புருனோ தலைமையிலும், தாளமுத்துநகர் மடுஜெபமாலை ஆலயத்தில் பங்குத்தந்தை நெல்சன்ராஜ் தலைமையிலும், ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கிய நாதர் ஆலயத்தில் உதவி பங்குத்தந்தை ஸ்டீபன் மாியதாஸ் தலைமையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதேபோல, அனைத்து கத்தோலிக்க தேவாலயங்கள், சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டையில் கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகை
ஏப்ரல் 1-ம் தேதி புனித வியாழனை முன்னிட்டு ஏசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்வை நினைவுகூறும் வகையில், பாதம் கழுவும் சடங்கு கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 3-ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு ஈஸ்டர் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 4-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நாகர்கோவில்
நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதுபோல் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், கருங்கல், குளச்சல், குலசேகரம், களியக்காவிளை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் புனித சூசையப்பர் திருத்தலம், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) சார்பில் குருத்தோலை ஞாயிறு பவனி நடத்தப்பட்டது. புனித சூசையப்பர் திருத்தல மக்கள், தென்னிந்திய திருச்சபைக்கு சென்றனர்.
அங்கிருந்து புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை ஜேக்கப், அருட்சகோதரர் அருள், மிக்கேல், தென்னிந்திய திருச்சபை சேகரகுரு தாமஸ் ஆகியோருடன் குருத்தோலையை கைகளில் ஏந்தி ஓசானா கீதம் பாடியவாறு பவனியாக சென்றனர். பின்னர் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது.