

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுகாவில் ஒரு பகுதி மற்றும் 22 ஊராட்சிகளை உள்ளடக்கியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் செழிப்பாக உள்ளன. நெல், கரும்பு, வாழை, எலுமிச்சை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த தொகுதியில் 1,18,227 ஆண் வாக்காளர்கள், 1,22,101 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 49 பேர் என, மொத்தம் 2,40,367 வாக்காளர்கள் உள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்பு
புளியங்குடியில் தமிழகத்தில் பிரபலமான எலுமிச்சை சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளாவுக்கு எலுமிச்சை வியாபாரம் செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகமாக உள்ளபோது விலை வீழ்ச்சியடைவதால் பழங்களை பாதுகாத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
மேலும், கரும்புக்கு விலை உயர்த்த வேண்டும், ஆலைக்கு அனுப்பும் கரும்புக்கான தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். கொல்லம்- திருமங்கலம் நான்குவழிச் சாலையை விவசாய நிலங்களை பாதிக்காதவாறு அமைக்க வேண்டும். விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு உடைப்பை சீரமைத்து, பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். அரசு கல்லூரி அமைக்க வேண்டும், வேலைவாய்ப்புக்கு தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளன.
வெற்றி வரலாறு
இந்த தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும் (1984, 1989, 1991), அதிமுக 2 முறையும் (2011, 2016), திமுக 2 முறையும் (1967, 1971), தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும் (1996, 2001), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 முறையும் (1977, 1980), மதிமுக ஒரு முறையும் (2006) வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோகரன் 73,904 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் அன்பழகன் 55,146 வாக்குகள் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சமுத்திரக்கனி 13,735 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராஜ்குமார் 7,121 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பழனிசாமி 4,008 வாக்குகளும் பெற்றனர்.
வெற்றி யாருக்கு?
நடைபெற உள்ள தேர்தலில் மனோகரன் எம்எல்ஏ மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். இவர், கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் வாசுதேவநல்லூர் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இருவருமே மக்களுக்கு அறிமுகமானவர்கள். அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளும் களத்தில் இருந்தாலும், வெற்றியை அடைவதில் மனோகரன், சதன் திருமலைக்குமார் இடையே தான் கடுமையான போட்டி உள்ளது.
எம்எல்ஏவாக இருந்தபோது செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். வாகை சூடுவது யார் என்பது மே 2-ம் தேதி தெரியும்.