

விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜி.வி.மார்க்கண்டேயனை ஆதரித்து மேலக்கரந்தை, தாப்பாத்தி, கோட்டூர், வடக்கு மற்றும் தெற்கு முத்தலாபுரம், தோமாலைப்பட்டி, கருப்பூர், மீனாட்சிபுரம், கடலையூர் ஆகிய கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார்.
பின்னர், கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட லிங்கம்பட்டி கடலைக்காரத் தெரு, கழுகுமலை, கயத்தாறு ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்தும், ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து புதியம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலும் அவர் வாக்கு சேகரித்தார்.
கோவில்பட்டியில் அவர் பேசியதாவது:
தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு ஏதாவது வளர்ச்சி திட்டம், தொழிற்சாலை, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளாரா?
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். நீட் தேர்வு காரணமாக மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் எதிர்த்து கேள்வி கேட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்டனர். சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் ஆகியோர் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தரப்பினரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ள இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் காலியாக உள்ள 3.5 லட்சம் அரசு பணியிடங்களிலும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
பெண்களுக்கு உரிமைத் தொகையாக ரூ.ஆயிரம் வழங்கப்படும். நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப்படும். தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை சிட்கோ மூலம் நியாயமான விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.தொழிற்பேட்டை விரிவுபடுத்தப்படும். அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்படும். ஒருங்கிணைந்த நீதிமன்றம், உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றார்.
பிரச்சாரத்தில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.