Published : 28 Mar 2021 06:44 PM
Last Updated : 28 Mar 2021 06:44 PM

என் தாயைப் பற்றி ஆ.ராசா இழிவாகப் பேசுகிறார்; இறைவன் தக்க தண்டனை கொடுப்பார்: கண்கலங்கிய முதல்வர் பழனிசாமி

சென்னை

சாதாரண மனிதன் ஒருவன் முதல்வராக இருந்தால் என்னென்ன பேசுகிறார்கள், இழிவுபடுத்துகிறார்கள். என் தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி என்னென்ன இழிவாகப் பேசுகிறார். இறைவன் தக்க தண்டனை கொடுப்பான் என முதல்வர் பழனிசாமி கண்கலங்கியபடி பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சை பாமக நிறுவனர் ராமதாஸும் கண்டித்தார். ஆ.ராசா, லியோனி இருவரது பேச்சும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், திமுக கண்ணியக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்காது என ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை, திருவொற்றியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். சிறிது நேரம் பேச முடியாமல் தலை கவிழ்ந்து நின்ற அவர், பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசியதாவது:

”திமுகவினர் திட்டமிட்டு என் மீது அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள். நான் முதல்வராக இருக்கிறேன். இதை இங்கு பேசக்கூடாது என்றுதான் வந்தேன். ஆனால், இங்கு தாய்மார்களைப் பார்த்ததால் பேசுகிறேன்.

என் தாய்க்காக மட்டும் நான் இந்தப் பிரச்சினையைப் பார்க்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு தாயாகப் பாருங்கள். எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். ஆக, ஒரு சாதாரண மனிதன் முதல்வராக இருந்தால் என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?

இவர்கள் எல்லாம் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுடைய நிலைமை என்ன ஆவது? தாய்மார்களின் நிலைமை என்ன ஆவது? சிந்தித்துப் பாருங்கள். தயவுசெய்து இதை நான் எனக்காகக் கேட்கவில்லை. எனக்காகப் பரிந்து பேசவில்லை. சிந்தித்துப் பாருங்கள். அவர் ஒரு தாய்க்குப் பிறந்தவர். தாய்மார்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுபவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.

என் தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, இரவு பகலாகப் பாடுபட்டவர். அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி இழிவாக, தரக்குறைவாக எப்படியெல்லாம் பேசினார். ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை. அவர்கள் நினைத்தால் சாதிக்க முடியும். ஆனால், நான் அப்படி அல்ல. உங்களைப் போல் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.

ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் என்பவர்தான் உயர்ந்த ஸ்தானம். யார் தாயை இழிவாகப் பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாகத் தகுந்த தண்டனை வழங்குவான். தாய்மார்கள் இருப்பதால் நான் இதைப் பேசினேன். ஆக இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் வந்துவிட்டால் எப்படி அராஜகம் செய்வார்கள், எப்படிப் பெண்களை இழிவுபடுத்துவார்கள் என்பதை மட்டும் எண்ணிப் பார்க்க வேண்டும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x