

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனைப் பணியை சென்னை காவல் ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வருகிற ஏப்ரல் 6-ம் தேதி அன்று தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திடவும், சென்னையில் உள்ள அனைத்துக் காவல் நிலைய எல்லைகளிலும், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவப் படையினர் ஒருங்கிணைந்து, முக்கிய மக்கள் கூடும் இடங்கள், வசிப்பிடப் பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் காவல் கொடி அணிவகுப்பு (Police Flag March) நடைபெற்று வருகிறது.
மேலும், தேர்தல் பறக்கும் படையினருடன், சென்னை பெருநகர போலீஸார் அடங்கிய குழுவினர் சென்னை பெருநகரின் முக்கிய இடங்களில் வாகன சோதனைகள் மேற்கொண்டு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறிச் செயல்படுவோர் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இன்று (28.3.2021) மதியம், வாகனத் தணிக்கைகள் நடைபெறும் இடங்களில் ஒன்றான அமைந்தகரை, ஸ்கைவாக் சிக்னல் அருகில் நடைபெற்று வரும் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கை பணியைப் பார்வையிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும், உரிய வழிகாட்டுதல்படி வாகன தணிக்கைகள் நடைபெறுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, அண்ணாநகர் துணை ஆணையர் ஜி.ஜவஹர் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.