ஆரோக்கியமான அரசியலுக்குத் தனிமனித விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது: கார்த்தி சிதம்பரம் பேட்டி

ஆரோக்கியமான அரசியலுக்குத் தனிமனித விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது: கார்த்தி சிதம்பரம் பேட்டி
Updated on
1 min read

‘‘ஆரோக்கியமான அரசியலுக்குத் தனிமனித விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது’’என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வாக்கர்ஸ் கிளப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு கார்த்தி சிதம்பரம் இன்று வாக்குச் சேகரித்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''எனக்கு இந்தி தெரியாததால் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கிறேன். ஆனால் அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தும், இந்தியில்தான் பதிலளிக்கின்றனர். வேண்டுமென்றே மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக இதைச் செய்கின்றனர்.

இந்தியாவில் இந்தி தெரியாதவர்கள் இந்தியனாக இருக்க முடியாது என்று கூறுகின்றனர். இந்துத்துவா கருத்தையும் திணிக்கின்றனர். அதற்குத் தடையாக இருக்கும் தமிழர்கள் வரலாறு, கலாச்சாரம், சுயமரியாதை, சமூக நீதிக்கு பாஜகவினர் எதிர்வினை ஆற்றுகின்றனர்.

தேர்தல் என்பது ஒலிம்பிக் போட்டி கிடையாது. இதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். யார் வர வேண்டும், வரக்கூடாது என்பதை இளைஞர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். சினிமா கட்சியினர் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். பிறகு காணாமல் போய்விடுவர். தேர்தலில் தோற்றாலும், ஜெயித்தாலும் நாங்கள் என்றும் உங்களுடன்தான் இருப்போம். தேர்தலில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து வருகிறது. இது தொடர வேண்டும்.

கருத்துக்கணிப்பை முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், எல்லாக் கருத்துக்கணிப்புகளும் ஒரே மாதிரியாக முடிவுகளைச் சொல்வதால் அந்த திசையை நோக்கி தேர்தல் செல்கிறது. பாஜக தலைவர்கள் வருகை தமிழகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். சுயமாக சிந்திக்கிற கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும். தனிநபர் செய்யும் அராஜக நடவடிக்கைகளுக்குக் கட்சிப் பொறுப்பை ஏற்க முடியாது. ஆரோக்கியமான அரசியலுக்கு தனிமனித விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. திமுக தலைமை இதுகுறித்து விளக்கம் கொடுத்துவிட்டது.

பாஜகவின் இந்தி, இந்துத்துவாவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்''.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பிட்டு ஆ.ராசா பேசிய ஒப்பீட்டு ரீதியான பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

திமுக கண்ணியக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்காது, மற்றவர்கள் நமது வார்த்தையை எடுத்து விமர்சிக்கும் வகையில் பேச்சு மூலம் இடம் தரக்கூடாது என ஸ்டாலின் திமுகவினருக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in