பாஜகவுக்குப் பாடம் புகட்ட இந்தத் தேர்தலே நமக்குக் கிடைத்த வாய்ப்பு: நடிகை ரோகிணி கருத்து

கறம்பக்குடியில் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்துப் பேசிய ரோகிணி.
கறம்பக்குடியில் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்துப் பேசிய ரோகிணி.
Updated on
1 min read

பாஜகவுக்குப் பாடம் புகட்ட இந்தத் தேர்தலே நமக்குக் கிடைத்த வாய்ப்பு என்று திரைப்பட இயக்குநரும், நடிகையுமான ரோகிணி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்து இன்று (மார்ச் 28) அவர் பேசியதாவது:

''தேசிய கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கு, பெற்றோர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது மட்டுமின்றி, மாணவர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும்.
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தாலே பாஜகவை எதிர்ப்பதாக இருக்கும்.
பொதுவாக நான் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்வதில்லை. ஆனால், தவறுகளைக் கண்டிப்பதில் மட்டுமல்ல, மவுனமாக இருப்பதும் குற்றம்தான். எனவே, நாம் அதிமுக கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

பாஜகவுக்குப் பாடம் புகட்ட நல்ல சந்தர்ப்பம் நமக்கு வாய்த்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாம் பெரிய பாதிப்பைச் சந்திப்போம்''.

இவ்வாறு ரோகிணி பேசினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசியது:

''கரோனா இல்லாவிட்டால் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தி பலரை நாடற்றவர்களாக பாஜகவினர் அறிவித்திருப்பார்கள். அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கரோனா ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொண்ட பிறகு குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்திருக்கிறார்.

பாஜக அமல்படுத்திய வேளாண் சட்டம், தேசிய கல்விக் கொள்கை போன்றவற்றை ஆட்சியில் இருந்தபோது ஆதரித்த அதிமுகவினர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக தற்போது எதிர்ப்பதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆட்சியில் இருக்கும்போது ஏன் எதிர்க்கவில்லை என்பதை மக்கள் நன்கு உணர்ந்து வைத்துள்ளார்கள். இவற்றைத் தேர்தலில் மக்கள் கட்டாயம் வெளிப்படுத்துவார்கள். அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பது வாழ்வாதாரம், கல்வி உரிமை, விளைநிலத்தைப் பாதுகாப்பதில் நாம் வெற்றி பெற்றதாக இருக்கும்''.

இவ்வாறு ஆதவன் தீட்சண்யா பேசினார். திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டோர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in