Last Updated : 21 Nov, 2015 06:51 PM

 

Published : 21 Nov 2015 06:51 PM
Last Updated : 21 Nov 2015 06:51 PM

தேச அளவில் மெகா கூட்டணிக்கு அச்சாரம்: பிஹார் சந்திப்பில் ஸ்டாலினும் திமுக பார்வையும்

"அண்மையில் பிஹார் முதல்வர் பதவியேற்பு விழாவில் பிற கட்சித் தலைவர்கள் சங்கமித்தது விருந்தினர்களாக அலங்கரிப்பதற்கு மட்டுமே அல்ல. தேசிய அளவில் மெகா கூட்டணி அமைவதற்கான சாத்தியக் கூறு அதிகமாக இருக்கிறது என்பதற்கான அச்சாரமே அது" என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதேஅளவுக்கு பிஹார் முதல்வர் பதவியேற்பு விழாவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆம், பிஹார் முதல்வர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, என பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திமுக சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலினை நியமித்தார் கட்சித் தலைவர் கருணாநிதி.

நிதிஷ் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின் கூறும்போது, "பிஹாரில் நிலவும் அரசியல் சூழல் தேசிய அளைவில் ஒரு மெகா கூட்டணி உருவாவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தேசிய அரசியலில் மாற்றத்துக்கான வாய்ப்பு உள்ளது.

தேசிய அளவில் உருவாகும் அத்தகைய கூட்டணியில் சேர திமுக தயாராகவே இருக்கிறது. இருப்பினும், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் இப்போதைக்கு எங்கள் கவனம் மாநில அரசியல் மீதே உள்ளது.

பிஹார் முதல்வர் பதவியேற்பு விழாவில் பிற கட்சித் தலைவர்கள் சங்கமித்தது விருந்தினர்களாக அலங்கரிப்பதற்கு மட்டுமே அல்ல. தேசிய அளவில் மெகா கூட்டணி அமைவதற்கான சாத்தியக் கூறு அதிகமாக இருக்கிறது.

மம்தா பானர்ஜியுடன் நீண்ட நேரம் ஆலோசித்தேன். அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் திமுக செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்" என்றார் ஸ்டாலின்.

இருப்பினும், திமுகவின் யோசனையை மறுத்த இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி.ராஜா, "பிஹார் முதல்வர் பதவியேற்பு விழாவில் பல கட்சித் தலைவர்கள் ஒரேசேர கலந்து கொண்டதை வைத்து மட்டுமே தேசிய அளவில் ஒரு முன்னணி உருவாகும் எனக் கருதக்கூடாது.

ஒவ்வொரு மாநில அரசியல் சூழலும் வித்தியாசமானது. கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கும் முன்னர் மாநில வாரியான மதிப்பீடுகளை செய்வது அவசியம்.

பிஹாரை பொறுத்தவரை பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது இடதுசாரிகளின் குறிக்கோளாக இருந்தது. அது நடந்துவிட்டது. எனவே, தேர்தல் கூட்டணி முடிவுகள் கால சூழலுக்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டிய ஒன்று" என்றார் ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x