கிடா வெட்டுக்கு பிரபலமான மதுரை பாண்டி கோயிலில் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு
தென் தமிழகத்தில் கிடா வெட்டுக்குப் பிரபலமானது மதுரை பாண்டி கோயில். மதுரை-சிவகங்கை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலை மதுரை மட்டுமின்றி தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் குல தெய்வமாக வழிபடுகின்றனர்.
அவர்கள், இந்தக் கோயிலில் தங்களது வேண்டுதல்களுக்கு நேர்த்திக் கடனாக கிடா வெட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் உற்றார், உறவினர்களை அழைத்து கிடா வெட்டி கறி விருந்து வைப்பார்கள். இது தவிர திருமணம், காது குத்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் இக்கோயிலை மையமாகக் கொண்டு அதிக அளவு நடைபெறும்.
இந்தக் கோயிலில் வழங்கப்படும் கறி விருந்து அசைவப் பிரியர்கள் மத்தியில் தனி சிறப்பு பெற்றது. இந்த விருந்தில் கிடைக்கும் தனி சுவை, மணம் வேறு எங்கும் கிடைப்பதில்லை என்று பக்தர்கள் கூறுவார்கள்.
தற்போது தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றாலும் இக்கோயிலில் கிடா வெட்டு, கறி விருந்து வழக்கம்போல் நடந்து வருகிறது. இது பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி நடக்கிறதா? அல்லது அரசியல் கட்சியினர் அதை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கறி விருந்து வைக்கிறார்களா? என்று தேர்தல் அதிகாரிகள் தினமும் கண்காணிக்கின்றனர்.
அவர்கள் அவ்வப்போது வாகனங்களில் கோயில் பகுதியில் ரோந்து வருவதோடு சாதாரண ஆட்கள்போல் கறி விருந்து நடக்கும் இடங்களைக் கண்காணிக்கின்றனர்.
அரசியல் கட்சியினர் காரணமே இல்லாமல் கறி விருந்து வைத்தால் அவர்களைக் கண்காணித்து வழக்குப் பதிவு செய்வதற்கு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘வாக்காளர்களைக் கவர கறி விருந்து வைப்பதோடு பரிசுப் பொருட்கள், பணம் வழங்குவது தவறு. அந்த அடிப்படையில் வழக்கம்போல் தேர்தல் நேரத்தில் பாண்டி கோயில் பகுதிகளில் நடக்கும் கறி விருந்து நிகழ்ச்சிகளையும் கண்காணிப்போம். அதுபோன்றுஇந்த முறையும் கண்காணிக்கிறோம்’ என்றனர்.
