

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கரோனா விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். கரோனா தொற்று பரவலால் வீட்டில் முடங்கிய சிறுவர்கள், பள்ளி மாணவர்களை அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது அதிகரித்துள்ளது.
பிரச்சாரத்தின்போது கொடி பிடித்து செல்லவும், வீடு வீடாகச் சென்று கட்சி துண்டறிக்கைகளை வழங்கவும் பயன்படுத்துகின்றனர். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரங்களில் சிறுவர், சிறுமிகளை அதிகம் காண முடிகிறது. விதிகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் நடைபெறாததால் சில சிறுவர்களை வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் அனுப்புகின்றனர். பெரியவர்களை பிரச்சாரத்துக்கு அழைத்து சென்றால் பிரியாணி, ரூ.500 ரூபாய் பணம், மதுபானம் போன்றவற்றை வாங்கித்தர வேண்டிய கட்டாயம் வேட்பாளருக்கு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க அவர்கள் சிறுவர்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். பெரியவர்கள் வெயில் நேரத்தில் சரிவர பிரச்சார பணிகளில் ஈடுபடுவதில்லை. ஆனால், சிறுவர்கள் வெயிலையும் பார்க்காமல் துடிப்புடனும் பணியாற்றுவதால் அவர்களை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு ரூ.100, 200 கொடுத்துவிட்டு பிரச்சார பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.
சிறுவர்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும். இது சிறுவர்கள் தவறான பாதையில் செல்ல வழிவகுக்கும். இதை தடுக்க மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.