

திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றுவோர் இன்று தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இந்த சூழலில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட கன்டோன்மென்ட், தில்லைநகர், உறையூர், புத்தூர் அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டிபுதூர், செஷன்ஸ் கோர்ட் உள்ளிட்ட 8 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், காவலர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் என்ற அடிப்படையில் ஒரு வேட்பாளரிடமிருந்து வழக்கறிஞர்கள் மூலம் அந்தந்த காவல் நிலையங்களில் மொத்தமாக 'கவர்' அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் ஆகியோரின் உத்தரவுப்படி காவல் உதவி ஆணையர் மற்றும் வட்டாட்சியரை உள்ளடக்கிய குழுவினர் நேற்று மாலை திடீரென 8 காவல் நிலையங்களுக்கும் சென்று சோதனையிட்டனர். காவல் ஆணையரும் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தில்லைநகர், அரசு மருத்துவமனை ஆகிய காவல் நிலையங்களில் இருந்து ரைட்டர்களிடமிருந்து பணத்துடன் கூடிய 'கவர்'கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற காவல் நிலையங்களில் பணத்தை பிரித்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, இத்தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் ரைட்டர்கள் அனைவரையும் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைத்து ஆணையர் ஜெ.லோகநாதன் நேற்றிரவு விசாரணை நடத்தினார். அப்போது பணத்துடன்கூடிய 'கவர்' அளித்தது எந்த வேட்பாளர், அவரது சார்பாக அளித்த நபர்கள் யார், பணத்தைப் பெற்றுக் கொண்ட காவல் அதிகாரிகள், காவலர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் கேட்டபோது, ‘‘திருச்சி மாநகரில் உள்ள 8 காவல் நிலையங்களில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையும் , வருவாய்த்துறையும் இணைந்து சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அதிமுக வேட்பாளராக பத்மநாபன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.