Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பற்றி தரக்குறைவான பேச்சு; ஆ.ராசாவுக்கு ராமதாஸ், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டனம்: பிரச்சாரத்துக்கு தடை விதிக்குமாறு அதிமுக மனு; சீமான், லியோனி உள்ளிட்டோரின் அநாகரிக பேச்சுக்கும் எதிர்ப்பு

தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் பழனிசாமி குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமின்றி, திமுக கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கொடுத்துள்ளது.

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 26-ம் தேதி நடந்தபிரச்சாரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசினார். அப்போது, முதல்வர்பழனிசாமியை அவர் விமர்சித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஒப்பீடு செய்யும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் அருவருக்கத்தக்கவை. தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை பின்னணியில் வைத்துக்கொண்டு, பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட பேச்சுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.

திமுகவின் தனிநபர் தாக்குதல்

2021 சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை முதல்வர் பழனிசாமி மீது தனிநபர் தாக்குதல்களையே திமுக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

சசிகலாவையும், முதல்வரையும் இழிவுபடுத்தும் வகையில் அருவருக்கத்தக்க ஒரு கருத்தைக் கூறி திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்தான் இந்த பரப்புரையில் இத்தகைய அணுகுமுறையை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ‘‘முதல்வர் தரையில் ஊர்ந்து சென்றவர்’’, ‘‘முதல்வர் பழனிசாமியின் மதிப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அணிந்துள்ள காலணியின் மதிப்பைவிட ஒரு ரூபாய் குறைவு’’ என்றெல்லாம் அருவருப்பாக விமர்சித்து வந்ததிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அதன் உச்சமாக முதல்வரின் பிறப்பை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்.

அரசியல் வரலாற்றிலும், பயணத்திலும் மு.க.ஸ்டாலினுக்கு பழனிசாமி எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல. இன்னும் கேட்டால் திமுக தலைவருக்கு மகனாக பிறந்துஅக்கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட்ட ஸ்டாலினுடன் ஒப்பிடும்போது, அதிமுகவில் கிளைச் செயலாளராக பணியைத் தொடங்கி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வராகவும் முன்னேறியுள்ள பழனிசாமிதான் அரசியல் திறன் மிக்கவர்.

முதல்வரைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லாததால்தான் திமுகஇத்தகைய அருவருக்கத்தக்க, ஆபாசமான, இழிவான பரப் புரையை முன்னெடுத்திருப்பதாக தோன்றுகிறது. யாரெல்லாம் அருவருக்கத்தக்கவர்களோ, இழிவானவர்களோ அவர்கள்தான் இத்தகைய அணுகுமுறையை கடைபிடிப்பார்கள். பெண்மையை போற்றுபவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் திமுககூட்டணி கட்சிகளும், பிற கட்சிகளும் இதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது அவர்களின் அரசியல் நேர்மை குறித்த ஐயங்களை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித் துள்ளார்.

இதற்கிடையே, தொண்டாமுத்தூரில் நடந்த திமுக பிரச்சாரக் கூட்டத்தில் திண்டுக்கல் லியோனிபேசும்போது, நாட்டு மாடுகளின்நன்மைகள் மற்றும் பெண்களின் உடலமைப்பு தொடர்பாக பேசியதும் சர்ச்சையாகியுள்ளது.

கனிமொழி கண்டனம்

இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெண்நிர்வாகிகளே கடும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

திமுக எம்.பி. கனிமொழி (ட்விட்டரில்): அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களைஇழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதில் வைத்துக்கொண்டால் இந்த சமூகத்துக்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும், பெரியாரும் விரும்பிய சமூகநீதி.

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி(ட்விட்டரில்): தடைகளைத் தாண்டிதீவிர அரசியலில் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்துவதும், ஆண்கள் எதிரெதிராக களம்காணும் போது அவர்கள் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. பெண்களை மதிப்பதில் இருந்துதான் கண்ணியமான, நேர்மையான அரசியல் என்பதை தொடங்கமுடியும். அதுதான் உண்மையான பெரியாரின் மண்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத் தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி: தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆண், பெண் தலைவர்களை விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது. ஆ.ராசா, சீமான், பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் போன்றவர்கள் பெண்மை, மனைவிக்கு உதவுவது, அவர்கள் பயன்படுத்தும் நாப்கின் குறித்தெல்லாம் அவதூறாக பேசிவருகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தேர்தலில் எதிரெதிர் அணிகள் கொள்கை அளவில் மட்டுமே மோதிக்கொள்ளும் பண்பு கொண்ட தமிழகம் வருங்காலத்தில் உருவாக வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் பி.பத்மாவதி: பெண்களை இழிவுபடுத்தி யார் பேசியிருந்தாலும் அது தவறுதான்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் திருமாறன், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ‘‘ஆ.ராசாமீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x