

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிரங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் 100வகையான பாரம்பரிய நெல் ரகங்
கள் நிகழாண்டில் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது என மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளது: மறைந்த பாரம்பரிய நெல் பாதுகாவலர் நெல் ஜெயராமனால் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைப் பரவலாக்கம் செய்யும் நோக்கத்துடன், ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையவேளாண் பண்ணையில் நிகழாண்டில் 100 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன.
தற்போது அனைத்து ரகங்களும் அறுவடை செய்யப்பட்டுள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள 60 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை வயதுடைய பாரம்பரிய நெல் ரகங்கள் இங்கு பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக பாரம்பரிய நெல் ரகங்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு உழவர்களுக்கு நல்ல மகசூலை தரக் கூடியதாகும்.
நிகழாண்டில் பெய்த கனமழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தாண்டியும் நல்ல முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் இயற்கைவிவசாயத்தில் பாரம்பரிய நெல்ரகங்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்துக் கொண்டுஇருப்பதை கருத்தில்கொண்டு, மத்திய, மாநில அரசுகள் உரிய கொள்கை முடிவு எடுத்து பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்க முன்வர வேண்டும் என்றார்.