

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு ஆசாரி தெருவைச்சேர்ந்தவர் எம்.வீரபாண்டியன். புதுக்கோட்டை மாவட்ட காசநோய்பிரிவு பணியாளரான இவர், அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அண்ணனுக்கு உதவியாளராக வும், அவருக்கு சொந்தமான கல்லூரியையும் கவனித்து வந்தார். இந்நிலையில், விராலிமலையில் உள்ள வீரபாண்டியனின் வீட்டில் வருமானவரித் துறையினர் நேற்று முன்தினம் மதியத்திலிருந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அதனருகே வீரபாண்டியனுக்கு சொந்தமான 6 வீடுகளைக் கொண்ட குடியிருப்பிலும் சோதனை மேற் கொள்ளப்பட்டது.
விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசுப் பொருட்கள் வீரபாண்டியனின் வீடு மற்றும் சில இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், விநியோகத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை வரை சுமார் 13 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இச்சோதனையின் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை அட்டைப் பெட்டிகளில் வைத்து துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.
இச்சோதனை குறித்து வருமான வரித் துறை ஆணையர் அனுராதாவிடம் கேட்டபோது, “புகாரின் அடிப்படையில் வீரபாண்டியனின் வீட்டில் சோதனை செய்தோம். இங்கு கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்து உயர்அலுவலர்கள் தெரிவிப்பர்” என்றார்.
அமைச்சர் சம்பத் உறவினர் வீட்டில்
தருமபுரியில் தனியார் பள்ளி தாளாளரும் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருமான இளங்கோவனின் நிதி நிறுவனம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இளங்கோவனின் பள்ளிக்கு நேற்று மாலை 3 கார்களில் வந்த வருமானவரித் துறையினர் பள்ளியிலும், இளங்கோவனுக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை சோதனை நீடித்தது.