

திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என உதகையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மு.போஜராஜனை ஆதரித்து, உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கடந்த 2006-ம் ஆண்டில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் அப்போது மக்களைப் பற்றிய அக்கறை இல்லாமல், அவர்களுக்கு எதுவும் செய்யாமல் இப்போது முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு கனவு காண்கிறார். இது ஒருபோதும் நிறைவேறாது.
முதல்வரைப் பற்றி குறைகூறும் ஸ்டாலின், முதல்வர்பழனிசாமியைப்போல பணியாற்ற முடியுமா? அதிகாலை முதல் இரவுவரை மக்களின் பிரச்சினைகளுக்காக இடைவிடாது நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர்.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி கவனம் செலுத்தி அனைத்து திட்டங்களும் பொதுமக்களை சென்றடையும் வகையில் அதிமுக அரசு செயல் பட்டு வருகிறது. தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து இலவசத் திட்டங்களும் மக்களை சென்றடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.