

தமிழக வளர்ச்சிக்கு கருணாநிதியின் நல்லாட்சியே காரணம் என ஓசூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஓசூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷை ஆதரித்து, நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கருணாநிதியின் நல்லாட்சியே தமிழக வளர்ச்சிக்கு காரணமாகும். பாஜக-வினால் தொன்னிந்தியாவில் வளர்ச்சியடைய முடியவில்லை. கர்நாடகாவில் கூட நேரடி தேர்தல் மூலமாக பாஜக ஆட்சிக்கு வரவில்லை. ஆபரேஷன் கமலா மூலமாக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளனர். தமிழகத்தில் அதிமுக தோளில் அமர்ந்து பாஜகவினர் வெற்றி பெற முயற்சிக்கின்றனர். இந்து-முஸ்லிம் இடையே கலகத்தை ஏற்படுத்தி நாட்டை ஆட்சி செய்கிறது பாஜக.
கருப்பு பணத்தை கொண்டு வந்து நாட்டிலுள்ள ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் கூறினார். அதை செய்யவில்லை. கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன் என்றார். அதையும் செய்யவில்லை.
விவசாயிகள், தொழி லாளர்கள், ஏழை எளிய மக்கள், மாணவர்கள் என யாரைப்பற்றியும் மோடிக்கு கவலையில்லை. மாறாக அம்பானி, அதானி ஆகிய பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். பெட்ரோல் , டீசல், காஸ் மற்றும் காய்கறி விலைகள் வேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக சித்தராமையா பிரச்சாரம் செய்தார். இக்கூட்டங்களில் கர்நாடக மாநில முன்னாள் அமைச் சர்கள் டி.கே.சிவக்குமார், ராமலிங்க ரெட்டி, ஜமீர்அகமது, காங்கிரஸ் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.