

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே எழும்பூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ.ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். இவர் கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், இந்நிலையில் குஜராத் சமாஜ் அமைப்பு சார்பில் ஜான் பாண்டியனை ஆதரித்து சென்னை வேப்பேரியில் உள்ள மகாராஷ்டிரா பவனில் தேர்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பங்கேற்று பேசியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுக் கால ஆட்சியில் நம்நாட்டில் அதிக அளவில் ஊழல்கள் நடைபெற்றன. அதற்கு 2ஜி அலைக்கற்றை முறைகேடு சிறந்த உதாரணமாகும். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த சீரழிவுகளை பாஜக தற்போது சரிசெய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நம்நாட் டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஜன்தன் திட்டத்தின் மூலம்
தமிழகத்தில் மட்டும் 94 லட்சம் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று காலத்தில் இந்த வங்கிக் கணக்குகள் வழியாக உதவிகள் செய்யப் பட்டன.
அதேபோல், இந்திய வரலாற்றில் முதன்முறையாக மோடி ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு 10 கோடி கழிவறைகள் கட்டி தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 90 லட்சம் பேர் கழிப்பறை வசதி பெற்றுள்ளனர். சாகர் மாலா திட்டம் மூலம் தமிழகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் தமிழகத்தில் 1.57 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதுதவிர பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி தமிழகத்தில் மேலும் 107 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
திமுக என்பதற்கு வாரிசு அரசியல், கட்டப்பஞ்சாயத்து என்பதுதான் பொருள். தேர்தல் என்பதால் மக்களிடம் வந்து தற்போது வாக்கு கேட்கின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நம்மிடமுள்ள நிலங்களையும் அபகரித்து கொள்வார்கள்.
திமுகவின் முன்னணி தலைவரான ஆ.ராசா தற்போது முதல்வர் பழனிசாமியின் தாயாரை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத் தக்கது. அத்தகைய திமுகவை உதறி பெண்களின் கண்ணியம் காக் கும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு
பொதுமக்கள் வாக்களிக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே வேட்பாளர் ஜான் பாண்டியன் சென்னையில் இல்லாததால் அவரது மனைவி பிரிசில்லா பாண்டியன் மற்றும் குடும்பத்தினர், அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து அந்தப் பகுதிகளில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அதிமுக- பாஜக அணிக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியிலும் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடு பட்டார்.