

சென்னை மாநகரப் பகுதியில் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக போடப்பட்ட 167 கிலோ மீட்டர் நீள நவீன சாலைகள் கன மழையால் சேதமடையவில்லை என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச் சர் எஸ்.பி.வேலுமணி தெரி வித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி சென்னை மாநகரம் முழுவதும் பழுதாகி இருந்த 194 பஸ் சாலைகள் கண்டறியப்பட்டு, அவை 167 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.414 கோடியே 59 லட்சம் செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டன.
சேவை நிறுவனங்களான குடிநீர் வாரியம், மின்சார வாரியம் ஆகியவற்றின் பணி நடைபெறும் 14 சாலைகள் தவிர்த்து 180 சாலைகளில் தார் சாலை அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இப்பணி, சென்னை மாநகர வரலாற்றிலேயே முதல் முறையாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலைப் பணிகள் தொடங்கியது முதல் முடியும் வரை கண்காணிக்க திட்ட மேலாண்மை கலந்தாளுநர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சாலை அமைக்கும் பணியை ஒவ்வொரு நிலையிலும் கண்காணித்து தரமான சாலை அமைப்பதை உறுதி செய்துள்ளார். இவ்வாறு 180 சாலைகள் போடப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த 1918-ல் தான் 108 செ.மீ. மழை பெய்துள்ளது. இப்போது 20 நாட்களில் 114 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த கனமழையிலும் மேற்கூறிய 180 சாலைகளும் எந்தவித சிறு சேதாரமும் ஆகவில்லை. இதற்கு காரணம் சாலை அமைப்பதில் அரசு நவீன முறையை புகுத்தியது தான்.
மழை நீரை வெளியேற்று வதற்காக சேவைத் துறைகள் சார்பில் 8 சாலைகளில் சிறிய அளவில் தோண்டப்பட்டுள்ளது. அவை மழை முடிந்தவுடன் சரி செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.