Last Updated : 28 Mar, 2021 03:17 AM

 

Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடுரோட்டில் நடைபெறும் பிரச்சாரம்: திக்கித் திணறும் பொதுமக்கள்

நடுரோட்டில் நடைபெறும் தலைவர்களின் பிரச்சாரக் கூட்டங்களால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது,பொது மக்களின் இன்னல்களுக்கு குறைவிருக்காது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப் பாட்டில் செயல்படும் பறக்கும் படை நிலையாணைக் குழு, கண்காணிப்புக் குழு என பல்வேறு குழுக்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களோ, ‘வாகனங்களை பரிசோதனை செய்கிறோம்’ என்ற பெயரில் குடும்பத்தோடு செல்பவர்கள், கோயிலுக்குச் செல்பவர்கள், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருகின்றனர்.

அதேபோன்று தேர்தல் பிரச்சாரத் திற்கு வரும் தலைவர்களோ தங்களது பிரச்சாரங்களை நகரின் மையப் பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் நின்று தான் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வழியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

தேர்தல் காலம் என்பதால் தினம் ஒரு பிரச்சாரத்தால் சாலைகளில் திரளும் கூட்டத்தால் போக்குவரத்து தடைபடுகிறது. இதனால் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள் மீது பொதுமக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் ஏற்படுகிறது.

தேர்தல் ஆணையம், பொது இடத்தில் சாலைகளில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிப்பதற்கு ஏன் தயங்குகிறது என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி

இது தொடர்பாக சமூக ஆர்வலரும், வணிகர் சங்கப் பிரமுகருமான பன்னீர்செல்வம் கூறுகையில், "ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். ஆனால் நிம்மதி மட்டும் கிடைப்பதில்லை.

முன் பெல்லாம் காமராஜர், அண்ணா, பெரியார், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் பங்கேற் கும் கூட்டங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நடத்தப்பட்டாலும் அவர் களைக் காண கூட்டம் தானாக வரும். ஆனால் இன்றோ மக்கள் எங்கு அதிகமாக புழங்கிக் கொண்டிருக்கிறார்களோ அங்கு தான் கூட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. அதிலும் கூட்டத்தினரை முச்சந்தியில் நிறுத்துகின்றனர். போக்கு வரத்தை தடை செய்து நடத்தப்படும் கூட்டங்களால் அவர்களுக்கும் ஆதாயம் கிடையாது, பொதுமக்களும் நிம்மதி கிடையாது.

பின்னர் எதற்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் எனத் தெரியவில்லை.

எப்படியானாலும் ஆட்களை அழைத்து வந்து தான்கூட்டம் நடத்தவேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளதால், தேர்தல் காலமானாலும் சரி, வேறு காலங்களிலும் கூட்டம் நடத்துவதற்கு என ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இடம் ஒதுக்கி கூட்டத்தை நடத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த வாரத்தில் இந்த பாதிப்பு சற்று அதிகம் இருந்தது. வரும் நாட்களில் இதை தேர்தல் ஆணையம் காவல் துறை ஒத்துழைப்போடு முறைப்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் ஆணையம் கவனிக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x