பேசி கவர்கிறார் அவர்; பேசாமல் கவர்கிறார் இவர்

விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்.
விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்.
Updated on
2 min read

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார். திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடுகிறார்.

பொன்முடி தொகுதிகள் தோறும் மைக் பிடித்து, பல்வேறு விஷயங் களை சுட்டிக் காட்டி தீவிர பரப்புரை மேற்கொள்கிறார். நாம் சென்றிருந்த போது, திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட ஏமப்பூர் கிராமத்தில் உணர்ச்சிகரமாக பேசி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

“திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானவர். இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் முதலில் திமுகவில் இருந்தார். பின்னர் பாமக சென்று எம்எல்ஏவானார். அதன்பின் மீண்டும் திமுகவுக்கு வந்தார். தற்போது பாஜகவில் உள்ளார்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இல்லாத நிலையிலேயே 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்தீர்கள். தற்போது நம் கூட்டணியில் விசிக உள்ளதால் வெற்றி பெறுவது எளிது; அது முக்கியமல்ல. பாஜக டெபாசிட் வாங்கக் கூடாது. அந்த அளவுக்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

சமையல் எரிவாயு 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது குறைய திமுக ஆட்சிக்கு வர வேண்டும். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை கண்டித்து ஐநா சபையில் 24 நாடுகள் கையெழுத்திட்டன.

ஆதரித்து 11 நாடுகள் கையெழுத் திட்டன. ஆனால் இந்திய அரசு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. இதிலிருந்து இந்திய அரசுக்கு தமிழர்கள் மீது எவ்வளவு அக்கறை உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்” என்று பல விஷயங்களைத் தொட்டு லோக்கல் விஷயத்தில் இருந்து, சர்வதேச அரசியல் வரை பேசி வாக்கு கேட்டார்.

இதற்கு நேர் மாறாக இருந்தது விழுப்புரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண் முகத்தின் அணுகுமுறை.

விழுப்புரம் அருகே கோலியனூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நேற்று சி.வி. சண்முகம் வாக்கு சேகரித்தார்.

அப்போது ஒலிப்பெருக்கியில் அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளும் ஒலிபரப்பப்பட்டன. வேட்பாளர் சி.வி.சண்முகம் வாக்காளர் களை நோக்கி கைகூப்பியபடி மவுன மொழியில் வாக்கு சேகரித்தார். அப்பகுதி பெண்கள் அவரை திலகமிட்டு வரவேற்க, அவர் புன்னகையோடு ஏற்றுக் கொண்டார்.

இன்னும் சில இடங்களில், எம்ஜிஆர் பாடல் ஒலிக்க, அசத்தலாய் சிரித்தபடி அதே மவுன மொழியில், வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.

ரத்தத்தின் ரத்தங்களிடம், ‘என்ன உங்க ஆளு பேசவே மாட்டேங்கிறாரு!” என்று நாம் கேட்க, “ அவர், செய்த செயல் பேசும்; அவர் பேச வேண்டாம்” என்றனர் நெத்தியடியாக. “சரிதான்” என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

இப்படியாக விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய நட்சத்திர வேட்பாளர்களான பொன்முடி பேசியும், சி.வி.சண்முகம் பேசாமலும் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

வாக்காளர்கள் பேசியதையும் கணக்கில் கொள்கின்றனர்; பேசாததையும் கணக்கில் கொள்கின்றனர். ஆளும், ஆண்ட தரப்பினர் பேசியதும், செய்த தும், செய்யாததும் ஒன்று கூடி நிற்க, அவர்களுக்குள் பலவாறாக பேசிக் கொள்கின்றனர்.

அவர்களின் முடிவு என்ன? என்பதை எதுவும் பேசாமல் வாக்குச்சீட்டில் காட்டப் போகின்றனர்.

அவர்களுக்குள் பேசியதை நாம் அறிய மே 2 வரை பொறுத்திருக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in