விருத்தாசலம் யாருடைய கோட்டை?

விருத்தாசலம் யாருடைய கோட்டை?
Updated on
2 min read

வட மாவட்டங்களில் செல்வாக்கு மிகுந்த கட்சி என கருதப்படும் பாமக தங்களது கோட்டை எனக் கூறும் விருத்தாசலத்தில் இம்முறை ரத்தத்தின் ரத்தங்களோடு கைகோர்த்துக் களம் காண்கிறது.

ஏற்கெனவே இக்கோட்டையை வேட்டையாடிய மதுரைக்காரரின் மனைவி இம்முறை களமிறங்கியி ருக்கிறார். இம்முறை குக்கர் சின்னக் கட்சியோடு அவர் இணைந்துள்ளார்.

இத்தொகுதியில் உடன்பிறப்புகளை நம்பி களம் காண்கின்றனர் கதர் சட்டைக்காரர்கள். மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தொகுதியில் உற்சாகமாய் அரங்கேறியிருக்கிறது உள்குத்து அரசியல்.

எதிரணியில் கதர் சட்டைக் காரர் வேட்பாளர் என்றதும் உற்சாகமடைந்த பாட்டாளிகள், மதுரைக்காரரின் மனைவி என்றதும் சற்று கூடுதல் அக்கறை எடுத்து, தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். தனது சொந்தக்கட்சியினர் சிலரின் அதிருப்தியையும் பொருட்படுத்தாமல் வேகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் பாட்டாளி வேட்பாளர்.

அவரது வேகத்துக்கு தடைபோடும் விதமாக ரத்தத்தின் ரத்தங்கள், குக்கர் நிர்வாகியோடு கை குலுக்கி, சிறுத்தைகளோடு சித்து விளையாட்டை தொடங்கி, தங்களது பங்காளிகளையும் சந்தித்து ‘தீயாய் வேலை செய்யனும் குமாரு’ன்னு சொல்லி, மதுரைக்காரரின் மனைவிக்கு மகுடம் சூட்டும்வேலையில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை அறிந்து பாட்டாளிகள் சற்று சோர்வடைந்தாலும்,வெளியே காட்டிக் கொள்ளாமல் களப்பணியாற்றுகின்றனர்.

எதிர் முகாமில் சிறுத்தைகளின் சித்து விளையாட்டை அறிந்த கதர் சட்டையினர், மேலிடத்துக்கு தகவல் சொல்ல, அவர்களோ, ‘செய்ய வேண்டியதை செய்யுங்க எல்லாம் சரியாகும்’ என சிம்பிளாக கூறி விட்டனராம்.

உடன் பிறப்புகளின் நம்பிக்கை நாயகன் எனக் கருதி நல்லூரில் பாவடையோடு வலம் வரும் ஒன்றிய செயலாளரிடம் சென்றால், தன்னைச் சார்ந்தோருக்கு விசுவாசம் காட்டும் நேரம் இது எனக் கூறி, அவர் வலம் வருகிறாராம். இதைப் பார்த்த சாரதிக்கு சற்று தெம்பு கூடியிருக்கிறதாம்.

ஒன்றியங்களில் தான் இந்தநிலை என்றால் நகர திமுகவில் பிரச்சாரம் செய்ய40 ஆயிரத்தை கையில் வைத்தால் தான் கை மேல் பலன் கிடைக்கும் என கறாராக பேசி வருவதால் கதர் சட்டையினர் ரொம்பவும் கசங்கி போயிருக்கின்றனர்.

கூட்டணியில் தான் இத்தனை குளறுபடிகள் என்றால் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பக்கத்து மாவட்டத் தலைவரோ, கூட்டணிக் கட்சித் தலைவர் வந்த போது, வெறும் ‘கை'யோடு வந்த நிற்க, “என்ன தலைவரே உங்கக் கட்சி வேட்பாளருக்கு எங்கக் கட்சித் தலைவர் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறார், உங்க கொடி பிடிக்க ஒரு கையை கூட காணவில்லை” என உடன்பிறப்பு வினவ, “அட போங்க சாமி, அப்பப்ப அவிழும் வேட்டிய கட்டவே இரண்டு கையும் பத்தலை, இதல வேற கொடிய எங்க பிடிக்கிறது”ன்னு அலுத்துக் கொண்டாராம்.

எதிர் தரப்பில் பிரச்சினையைத் தீர்க்க பாட்டாளிகள், ரத்தத்தின் ரத்தங்களை அணுகி கேட்ட போது, “கோட்டையில் விழுந்த ஓட்டையை அடைக்க பொதுமக்களிடம் போதுமான பசையில்லை. எனவே ஓட்டை அப்படியே இருக்கட்டும். கோட்டைக்கு யாரும் சொந்தம் கொண்டாட வேண்டாம் என முடிவு பண்ணிட்டோம்” என்கின்றனராம் அசால்ட்டாக!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in