

விருத்தாசலம் தொகுதியில் களம் காண்கிறார் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா.
தன்னம்பிக்கை பேச்சு, தளராத பிரச்சாரம் என தொகுதியில் தீவிரமாக வலம் வருகிறார்.
விஜயகாந்த் மனைவி என்ற நட்சத்திர அந்தஸ்து அவரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
பிரச்சாரத்திற்கு நடுவே, தன் கணவரைப் போலவே தொகுதிக்குட்பட்ட விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோயில் என கோயில்களுக்குச் சென்று இறை வழிபாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
மனுத் தாக்கல் செய்த கையோடு, கொளஞ்சியப்பர் கோயிலுக்குச் சென்ற பிரேமலதா அங்கு பிராது கட்டி வழிபட்டார்.
வேறெந்த கோயிலிலும் இல்லாத ஒரு வழிபாட்டு முறையாக இங்கு பிராது கட்டி தங்கள் முறையீட்டை கொளஞ்சியப்பரிடத்தில் பக்தர்கள் சொல்வதுண்டு.
இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பிராது சீட்டு விற்கப்படும். இறைவனிடத்தில் முறையிடும் பக்தர்கள் அதில், தங்கள் முறையீட்டை எழுதி, கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள மரத்தில் கட்டித் தொங்க விட வேண்டும்.
“கொளஞ்சியப்பா இன்ன விஷயம், இன்ன மாதிரியான சிக்கலாக இருக்கிறது. அதை நீ தான் தீர்க்க வேண்டும். அதற்காக உன்னிடம் பிராது (புகார்) தருகிறேன்!” இதுதான் இந்த வழிபாட்டின் சாரம்சம்.
குழந்தைப் பேறு, கல்வி, வேலைவாய்ப்பு, திருமணத் தடை, உடல் நலச் சிக்கல், பணப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளுக்கு பக்தர்கள் இந்த வழிபாட்டு முறையை இக்கோயிலில் கடைப்பிடிக்கின்றனர். பலனடைந்த பக்தர்கள் மீண்டும் வந்து, முருகனுக்கு (கொளஞ்சியப்பருக்கு) ரசீது கட்டி, பிராது கொடுத்ததை திரும்பப் பெறுகின்றனர். இதற்காக “கொளஞ்சியப்பா உன்னிடம் முறையிட்டேன். உன் பார்வையால் சரியாகி விட்டது. அதனால் பிராது கொடுத்ததை திரும்பப் பெறுகிறேன்’‘ என்று சீட்டு எழுதி அதே மரத்தில் தொங்க விடுகின்றனர்.
பிரேமலதா இறைவனிடத்தில் என்ன பிராது கொடுத்தார் என்பது தெரியவில்லை. அது நமக்கு அவசியமும் இல்லை.
ஆனால், அவர் கொடுத்த பிராது அவனிடத்தே சென்று சேரட்டும்; அக்குறை நீங்கட்டும். நாமும் அதற்காக பிரார்த்திப்போம்.