கண்டு கொள்ளப்படாத கடைகோடிக் ‘கை’கள்: பாரம்பரியமிக்கது அகில இந்திய காங்கிரஸ் கட்சி

கண்டு கொள்ளப்படாத கடைகோடிக் ‘கை’கள்: பாரம்பரியமிக்கது அகில இந்திய காங்கிரஸ் கட்சி
Updated on
1 min read

கண்டு கொள்ளப்படாத கடைகோடிக் ‘கை’கள் பாரம்பரியமிக்கது அகில இந்திய காங்கிரஸ் கட்சி.பல்வேறு மாநிலங்களில் முடி சூட்டிக் கொண்டிருந்த அக்கட்சி, இன்று பல இடங்களில் மக்களின் நம்பகத்தன்மையை இழந்து, அதற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறது. அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இளைஞர்களை கட்டியெழுப்பும் ஒரு அரணாக இருப்பார் என சில தலைவர்கள் யூகித்த போதிலும், அது அவருக்கு சரியாக ‘கை’ கூடவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் எதிர் கொள்கிறது. அக்கட்சி 25 இடங்களில் வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டத்தில் சற்று தெம்பாக இருக்கும் என்பதால் அக்கட்சிக்கு தென் மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வட மாவட்டங்களிலும் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் எந்த அளவுக்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அறிய முயன்றோம்.

கள்ளக்குறிச்சி மற்றும் விருத்தாசலம் தொகுதிகளில் பல கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் காரில் வலகின்றனர். இளைஞர்களோ அதி வேக பைக்குகளில் பறக்கின்றனர்.

இந்த சூழலிலும் கடந்த 45 ஆண்டுகளாக தனது சைக்கிளிலேயே கட்சிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார் ஏகாம்பரம். எளிய காங்கிரஸ் தொண்டர். கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் கூலி தொழில் செய்து வருகிறார்.

தன்னுடைய 10 வயது முதலே காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்டு, கட்சிக்காக பணியாற்றி வருகிறார்.

“அன்னை இந்திராவின் மன உறுதியே எனக்குள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதுமுதல் அவருக்காக தான் கட்சியில் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறேன். கட்சியில் யார் வேண்டுமானாலும் வந்து போகலாம், மீண்டும் ஒரு இந்திரா கிடைக்கப் போவதில்லை. என்கட்சி எனக்கு என்ன செய்திருக்கிறது என்பதை விட அன்னை இந்திராவின் கட்சிக்காக என் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறேன்.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும்” முகத்தில் சோர்வு இருந்தாலும், வார்த்தைகளின் நம்பிக்‘கை’யில் அனல் பறக்கிறது.

அதைக் கூறியபடியே, மிதிவண்டியை மிதித்தபடி வாக்கு வேட்டையாடுகிறார். மிதிவண்டியின் முன்னால் கட்டப்பட்ட கட்சிக் கொடி காற்றில் பறந்து, கம்பீரம் காட்டுகிறது.

திராவிட கட்சிகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்; ஆனாலும் எளிய கிளைக் கழகத்தில் இருப்பவர்கள் அவர்கள் மட்டத்தில், ஏதேனும் பயன்பெற அக்கட்சிகள் வழிவகை செய்து கொடுக்கும். ஆனால், காங்கிரஸில் இவரைப் போன்றவர்கள் கடைசி வரைக்கும் கண்டு கொள்ளப்படுவதே இல்லை. எல்லா வாய்ப்புகளும் மேல் மட்டத்தோடே நின்று விடும். காங்கிரஸின் சரிவுக்கான மிக முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று”

உடனிருந்த உள்ளூர் அரசியல் ஞானி ஒருவர் சொல்ல, அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், ஏகாம்பரம் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

மிதிவண்டியின் முன்னால் கட்டப்பட்ட கட்சிக் கொடி காற்றில் பறந்து, கம்பீரம் காட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in