சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டக்கானல் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

கொடைக்கானல் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்.
கொடைக்கானல் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடைக்கானல் வட்டக்கானல் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் டால்பின் நோஸ் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வட்டக்கானல் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கொடைக்கானல் நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தங்கள் பகுதிக்கு முறையாக சாலைகள் அமைக்கவில்லை, குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தும் பல ஆண்டுகளாகியும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, வட்டக்கானல் பகுதியில் தெருவிளக்குகள்கூட பொருத்தப்படவில்லை. டால்பின் நோஸ் பகுதிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்படவில்லை. திருவள்ளுவர் நகர் வரை சாலைகள் புதிதாக அமைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் மாற்றந்தாய் மனப்பான்மையோடு தங்கள் பகுதி நடத்தப்பட்டதால் வட்டக்கானல் மற்றும் திருவள்ளுவர்நகர் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து போஸ்டர்கள் அடித்து நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

25 ஆண்டுகளுக்கும் முன்பு அமைக்கப்பட்ட வட்டக்கானல் சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. சுகாதார நிலையம் அமைத்துத்தர வேண்டும். வட்டக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பறை வசதி செய்துதர வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிப்போம். இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in