

மங்கலதேவி கண்ணகி கோயிலில் வரும் சித்ரா பவுர்ணமி அன்று வழிபாடுகளை மேற்கொள்ளவும், முன்னதாக கோயில் பகுதியை சீரமைக்ககோரியும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் தேனி ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றிப் பாறையில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. கோவலன் கொலை செய்யப்பட்ட துக்கத்தில் மதுரையை எரித்த கண்ணகி, வைகை கரையோரமாக இங்கு வந்ததாக சிலப்பதிகார பதிவில் உள்ளது. இந்த இடத்தில் கோவலன் கண்ணகிக்கு மங்களநாண் பூட்டி விண்ணுக்கு புஷ்பரதத்தில் அழைத்துச் சென்றதாக ஐதீகம்.
இதன் சிறப்பை உணர்ந்த சேரன்செங்குட்டுவன் இமயத்தில் இருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்கு இந்த இடத்தில் கோயில் கட்டினார். பின்னர் குலசேகரபாண்டியன், ராஜராஜசோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. கண்ணகிக்கான பழங்கால சிற்பங்களும் இங்கு உள்ளன. இலக்கியச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கான பாதை கேரளப் பகுதியில் உள்ளது. இதனால் அம்மாநில வனத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாத பவுர்ணமி அன்று மட்டுமே இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு கரோனா பாதிப்பினால் பக்தர்கள் யாரும் இங்கு அனுமதிக்கவில்லை. இந்த ஆண்டுக்கான சித்திரை முழு நிலவு விழா வரும் ஏப்ரல் 27-ல் நடைபெற உளளது.
ஆண்டின் ஒருநாள் மட்டுமே இங்கு பக்தர்கள் செல்வதால் மற்ற காலங்களில் கோயில் வளாகங்களில் புதர் மண்டி முட்செடிகளுடன் மாறிக்கிடக்கும். எனவே இவற்றை அகற்றி விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று ஆட்சியரிடம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் முருகன் ஆகியோர் மனுக் கொடுத்தனர்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக, கேரள மாநிலங்களில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் ஆகமவிதிப்படி பூஜை, திருவிழா நடைபெற்று வருகிறது. கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதாந்திர பூஜைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கேரள வனத்துறையினர் கண்ணகி கோயிலில் மட்டும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்ய விடாமல் தடுக்கின்றனர். எனவே ஏப்.27-ம் தேதி (செவ்வாய்) சித்திரா பவுர்ணமி அன்று கண்ணகி கோயிலில் ஆகம விதிப்படி விழா நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும் கோயில் வளாகத்தில் வளர்ந்து கிடக்கும் செடி, புதர்களை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்றைய தினம் கடந்த ஆண்டுகளைப் போல தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை வழங்கவும், சுற்றுலாத்துறை மூலம் அரசு நிதி ஒதுக்கீடு உரிய விழா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அதன்படி விழா நடைபெறும். பக்தர்கள் வந்து செல்வதற்காக குமுளியில் இருந்து ஜீப்கள் அதிகளவில் இயக்கப்படும். தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பளியன்குடியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும். மேலும் பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாகவும் ஏராளமான பக்தர்கள் கண்ணகி கோயிலுக்கு நடந்து செல்வர்.
விழாவுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம், விழாவுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.