Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM

கடும் போட்டி நிலவும் பழநி தொகுதி; யார் ஆட்சிக்கு வந்தாலும் பழநி தனி மாவட்டம்: அதிமுக, திமுக இருதரப்பிலும் வாக்குறுதி

பழநி தனி மாவட்டமாக உருவாக்கப் படும் என்ற வாக்குறுதியை அதிமுக, திமுக என இருகட்சியினரும் தந்துள்ளதால், யார் ஆட்சிக்கு வந்தாலும் பழநி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை பழநி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பழநி தொகுதியில் ஐந்துமுனைப் போட்டி இருந்தாலும் அதிமுக, திமுக இடையே தற்போது கடும்போட்டி நிலவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு புகழ் சேர்த்துக்கொண்டிருப்பவை ஆன்மீகதலமான பழநியில் உள்ள மலைக்கோயிலும், கோடை வாசஸ்தலமான மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலும்தான். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இந்த இரு இடங்களுக்கும் அதிக அளவு வந்துசெல்கின்றனர்.

பழநி தொகுதியில் பழநி, கொடைக்கானல் நகராட்சி பகுதிகள், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பண்ணைக்காடு ஆகிய பேரூராட்சிகள், பழநி, கொடைக்கானல் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்கள் உள்ளன.

கொடைக்கானல், பழநியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சுற்றுலாத் தொழிலையும் பலர் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இங்கு இன்னும் நிறைவேற்றப்படாத மக்கள் கோரிக்கைகள் நிறையவே உள்ளன. பழநி வரும் வெளியூர் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பது கோயிலுக்கு வந்து செல்பவர்களின் நிரந்தர குற்றச்சாட்டாக உள்ளது. ரங்கத்தில் அமைக்கப்பட்டது போல் பக்தர்கள் தங்கிச்செல்ல ‘யாத்திரி நிவாஸ்’ பெரிய அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை.

நகரின் மையத்தில் அமைந்துள்ள வையாபுரி கண்மாய் கழிவுநீர் தேக்கமாகவே காட்சியளிக்கிறது. ஒரு காலத்தில் கோயிலுக்கு வருபவர்கள் இந்த கண்மாயில் புனித நீராடி சென்றதாக சொல்வதும் உண்டு. தற்போது நகரில் சுகாதாரக்கேட்டை உருவாக்கும் மையமாக வையாபுரி கண்மாய் உள்ளது. பழநியில் உள்ள நீர்நிலை ஆதாரங்களை முறையாக பராமரித்து நீரை தேக்கினால் தற்போது பயிரிடப்பட்டும் வரும்பகுதியை விட கூடுதலாக சாகுபடி பரப்பை அதிகரித்து பயிரிடலாம் என்ற நிலை உள்ளது. அதற்கான முயற்சியை அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ஆண்டுதோறும் தண்ணீர் செல்லும் பச்சையாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பச்சையாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என்பது வேட்பாளர்களின் வாக்குறுதியாகவே உள்ளது. மாறி மாறி அரசுகள் வந்தாலும் பச்சையாறு அணைத்திட்டம் நிறைவேற்றப்படுவதில்லை.

கொடைக்கானல்

கொடைக்கானல் நகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் குண்டாறு பிரச்சனை பாதியில் விடப் பட்டுள்ளது. பணிளை விரைந்து முடிக்க மக்கள் கோரியும், நடைபெறவில்லை. கொடைக்கானல் நகரில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்த முறையான இடம் வசதி இல்லை. சாலையோரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அடுக்குமாடி கார் பார்க்கிங் என்ற வாக்குறுதியும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியாக மட்டுமே இடம்பெறுகிறது. அதன்பின் அதை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் மும்முரம் காட்டுவதில்லை. சுற்றுலா மேம்பாடு என்பது பெயரளவில் மட்டும் உள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கு என சிறப்பு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

கொடைக்கானல் மலையில் அறுவடை செய்யப்படும் மலைக் காய்கறிகளை சந்தைப்படுத்த மதுரைக்கு செல்ல வேண்டியதுள்ளது. மலைப்பூண்டு சந்தைப்படுத்த வடுகபட்டிக்கு விவசாயிகள் செல்ல வேண்டும். இதைத் தவிர்க்க கொடைக்கானலில் அல்லது மலையடிவாரத்தில் கொள்முதல் நிலையங்களை அரசு அமைக்க வேண்டும் என்பது மலை விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழநி தொகுதிக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள், அடுத்தடுத்த தேர்தல்களிலும் வாக்குறுதிகளாகவே உள்ளன. பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் அதே வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் கூறிவருகின்றனர். இந்த தேர்தலில் புதிதாக பழநியை தனி மாவட்டமாக உருவாக்குவோம் என முதல்நாள் பழநி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் பேட்டி கொடுக்க, அடுத்த நாள் அதிமுக வேட்பாளர் ரவிமனோகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த முதல்வர் பழனிசாமி, பழநியை தனி மாவட்டமாக்குவோம் என வாக்குறுதி கொடுத்துச் சென்றார். இதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் பழநி தனி மாவட்டமாக உருவாகும் என்ற நம்பிக்கையில் பழநி தொகுதி மக்கள் உள்ளனர்.

1977 முதல் நடந்த 10 தேர்தல்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா மூன்று முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1991 முதல் அதிமுக, திமுக என மாறிமாறி வெற்றி பெற்று வந்துள்ளன. தற்போது எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்த இ.பெ.செந்தில்குமார் உள்ளார், இவரே மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ரவிமனோகரன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் வீரக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் வினோத், மக்கள் நீதி மய்யம் சார்பில் பூவேந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இங்கு அதிமுக, திமுக இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தொகுதியை தக்கவைக்க திமுகவும், தொகுதியை கைப்பற்ற அதிமுகவும் முயல்கின்றன. இதனால் இருகட்சிகளிடையே கடும்போட்டி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x