மலைக் கிராமங்களில் இரவில் ஊர் திரும்ப வசதி இல்லாததால் தேர்தல் பணிக்கு செல்லும் பெண் அலுவலர்கள் சிரமம்: இம்முறையாவது போக்குவரத்து வசதி செய்து தரப்படுமா?

மலைக் கிராமங்களில் இரவில் ஊர் திரும்ப வசதி இல்லாததால் தேர்தல் பணிக்கு செல்லும் பெண் அலுவலர்கள் சிரமம்: இம்முறையாவது போக்குவரத்து வசதி செய்து தரப்படுமா?
Updated on
2 min read

மலை மற்றும் உட்கடை கிராம வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணிகள் முடிய இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடுவது வழக்கம். போக்குவரத்து வசதி இல்லாத அப்பகுதியில் இருந்து ஊர் திரும்ப எவ்வித வசதியையும் தேர்தல் ஆணையம் செய்வதில்லை. இதனால் பெண் அலுவலர்கள் இரவு நேரத்தில் பரிதவிக்கும் நிலை உள்ளது.

வாக்குப்பதிவுக்காக தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு நான்கு கட்டப் பயிற்சிகள் அளிக்கப்படும். இரண்டாவது பயிற்சியின் போது எந்த தொகுதியில் பணிபுரிய வேண்டும் என்ற விபரமும், இறுதிகட்டப் பயிற்சியின் போது ஒதுக்கப்படும் வாக்குச்சாவடி குறித்த விபரமும் தெரிவிக்கப்படும். இறுதிப் பயிற்சியின் போது அங்கிருந்தபடியே இவர்கள் சம்பந்தப்பட்ட பூத்திற்கு செல்ல வேண்டும். பின்பு அங்கேயே இரவில் தங்கி மறுநாள் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு மாலையே முடிந்தாலும் வரும் வாகனங்களில் மின்னணு இயந்திரங்களை ஒப்படைத்தபிறகே இவர்கள் அங்கிருந்து கிளம்ப முடியும். இந்த வாகனம் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பெட்டிகளை சேகரித்தபடியே வரும். தொடக்கநிலையில் உள்ள வாக்குச்சாவடிக்கு விரைவாகவும், கடைநிலையில் உள்ள மையத்துக்கு இரவிலும் இந்த வாகனங்கள் வரும். கடந்த தேர்தல்களைப் பொறுத்தளவில் வாக்குப்பெட்டிகளை ஒப்படைக்க இரவு 11 மணி வரை ஆகிவிடுவது வழக்கம். அதன்பிறகு பூத் ஏஜன்ட், கட்சியினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அங்கிருந்து கிளம்புவர். கட்சியினர் பெரும்பாலும் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருப் பதால் அவர்களுக்கு எந்த சிரமமும் இருப்பதில்லை.

ஆனால் அலுவலர்களுக்கு சொந்த தொகுதியில் ஒதுக்கீடு செய்யாமல் ரேண்டம் முறையில் தூரப் பகுதியில் உள்ள தொகுதியின் வாக்குச்சாவடியே ஒதுக்கப்படுவது வழக்கம். வாக்குச்சாவடிக்கு முன்தினம் பகலிலே இவர்கள் வந்து தங்கிவிடுவதால் பெரியளவில் சிரமம் இருப்பதில்லை. ஆனால் வாக்குப்பெட்டியை ஒப்படைத்தபிறகு இரவு நேரத்தில் பெரும்பாலும் மலை மற்றும் குக்கிராமங்களில் போக்குவரத்து வசதி இருப்பதில்லை. இதனால் பெண் அலுவலர்கள் ஊர் திரும்ப மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

இந்தமுறை வாக்குப்பதிவு நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்டிகளை வாகனங்களில் ஒப்படைக்க நள்ளிரவு வரை ஆக வாய்ப்புள்ளது. அதன்பிறகு ஊர் திரும்புவது எப்படி என்று பலரும் வருத்தத்தில் உள்ளனர். இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்குப் பயந்து கொண்டுதான் பலரும் தேர்தல் பணியை புறக்கணிக்கின்றனர். அல்லது மருத்துவ காரணங்களைக் கூறி விலகிக் கொள்கின்றனர். பணி செய்யத் தயாராக உள்ளோம். ஆனால் குறைந்தபட்ச பாதுகாப்பு, உணவு, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் தேர்தல் பணியில் இருந்து பலரும் ஒதுங்கிச் செல்லும் நிலை மாறும் என்றனர்.

இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் மு.முருகேசன் கூறுகையில், இம்முறை தேர்தல் பணி முடிய நள்ளிரவு ஆகிவிடும். இதனால் மலை மற்றும் உட்கடை கிராமங்களில் பணிபுரியும்அலுவலர்கள் குறிப்பாக பெண் அலுவலர்கள் சிரமத்தை அனுபவிக்கும் நிலை உள்ளது. குறைந்தபட்சம் அருகில் போக்குவரத்து உள்ள பகுதி வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல உரிய வசதியை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தமுறை வாக்குப்பதிவு நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்டிகளை வாகனங்களில் ஒப்படைக்க நள்ளிரவு வரை ஆக வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in