

சிவகங்கை, காரைக்குடி ஆகிய தொகுதிகளில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு திமுக நிர்வாகிகள் சிலர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என, ‘ஐ-பேக்’ குழு புகார் தெரிவித்தது. இதையடுத்து அவர்களை திமுக தலைமை எச்சரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் திருப் பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 2 தொகுதிகளில் திமுகவும், சிவகங்கை, காரைக்குடி ஆகிய 2 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சிகளும் களம் காண்கின்றன. இதில் சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரனும், காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடியும் போட்டியிடுகின்றனர்.
மேலும் கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் சிவகங்கை தொகுதி திமுகவிடம் இருந்து கை நழுவியது. அதேபோல் காரைக்குடி தொகுதியை 30 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகளுக்கே திமுக ஒதுக்கி வந்தது. இதனால் இந்தத் தேர்தலில் சிவகங்கை, காரைக்குடி தொகுதிகளை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில் கட்சித் தலைமையோ கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது. இதனால் திமுகவினர் அதிருப்தி அடைந்தனர்.
தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளநிலையில் வாக்குச் சேகரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இருந்தபோதிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு திமுக நிர்வாகிகள் சிலர் ஒத்துழைப்புத் தரவில்லை எனப் புகார் எழுந்தது. இதனைக் கண்காணித்த ‘ஐ-பேக்’ குழுவினரும், கூட்டணிக் கட்சியினரும் திமுக தலைமைக்கு புகார் அனுப்பினர்.
இதையடுத்து திமுக தலைமை, ஒத்துழைக்காத நிர்வாகிகளிடம் பேசி எச்சரித்துள்ளது. மேலும் இத்தேர் தலில் நமது கட்சியினரால் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியில் பாதிப்பு ஏற்பட்டதால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் ஒத்துழைக்காத திமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.