

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் தேர்தல் வாக்குறுதிகள், செயல்படுத்தி வரும் அரசு நலத்திட்டங் களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க பாஜகவின் பிரச்சார ஊர்திகளாக இளைஞர்கள் வலம் வருகின்றனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது பிரச் சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தத் தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவினாலும், பெரும்பாலான இடங்களில் அதிமுக, திமுக கூட்டணி களுக்கு இடையேதான் நேரடிப் போட்டி உள்ளது.
வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்குக் கேட்பதுடன், தங்கள் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களை அழைத்து வந்தும் கூட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில் முக்கிய அறிவிப்புகள் மக்களிடையே சென்றடைய தொடர்ச்சியாக ஒவ்வொரு கூட்டத்திலும் அதைப் பற்றி தலைவர்கள் பேசி வருகின்றனர்.
இதில் பாஜகவினர் மக்களை கவரும் வகையில் புதிய உத்தியைக் கையாண்டு வருகின்றனர். காரைக்குடியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள் முக்கிய வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட பதாகைகளை தங்கள் முதுகில் சுமந்தபடி தொகுதி முழுவதும் பாதசாரியாக வலம் வருகின்றனர். இதில் அதிமுகவும், பாஜகவும் வெளியிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு இளைஞரின் முதுகில் உள்ள பதாகையிலும் நரேந்திர மோடி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி மற்றும் வேட்பாளரான ஹெச்.ராஜாவின் படம், தாமரை சின்னம் உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளதோடு, முக்கிய வாக்குறுதி ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
காரைக்குடி நகரத் தெருக்களில் இளைஞர்கள் முதுகில் பதாகையோடு வலம் வருவதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பல இடங்களில் இந்த நூதனப் பிரச்சாரத்துக்கு வர வேற்பும் கிடைத்து வருகிறது.