

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் செ.முருகேசன் நேற்று முன்தினம் கமுதி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அபிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். அப்போது வேட்பாளருடன் மாநில மகளிரணி துணைச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ திசைவீரன், கமுதி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் சென்றனர்.
அபிராமம் அருகே நரியன் சுப்புராயபுரத்தில் வாக்குச் சேகரித்தபோது முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரனை கமுதி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் வாசுதேவனும், அவரது கார் ஓட்டுநரும் ராமநாதபுரம் தொகுதியில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் போட்டியிடும்போது, அங்கு தேர்தல் பணியாற்றாமல் இங்கு எதற்கு வந்தீர்கள் என ஒருமையில் பேசி தகராறு செய்துள்ளனர். இதனால் பவானி ராஜேந்திரன் விருட்டென காரில் ராமநாதபுரம் திரும்பினார். இந்நிகழ்வு திமுக மட்டுமின்றி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பவானி ராஜேந்திரன் கூறியதாவது, நான் கட்சித் தலைமையின் அனுமதி பெற்றே, பரமக்குடி திமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தேன். பரமக்குடியை அடுத்து மற்ற தொகுதிகளில் வாக்குக் கேட்க இருந்தேன். அப்படியிருக்கும்போது கமுதி திமுக நிர்வாகி பெண் என்றும் பார்க்காமல் என்னை அவமானப் படுத்தினார். நான் எம்எஸ்கே சத்தியேந்திரன் என்ற திமுக பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். நான் எம்பியாக இருந்தபோது கமுதி பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். அதனால் அப்பகுதி மக்களின் வாக்குகளை பெற வேட்பாளருடன் பிரச்சாரம் செய்தேன். அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நோக்கம். இதுகுறித்து கட்சி மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.