ஓராண்டாக மூடப்பட்டுள்ள கலாம் நினைவிடம்: சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி கிடைக்குமா?

ஓராண்டாக மூடப்பட்டுள்ள கலாம் நினைவிடம்: சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி கிடைக்குமா?
Updated on
1 min read

கரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக மூடப்பட்டுள்ள ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பில் ‘அப்துல் கலாம் தேசிய நினைவகம்' அமைக்கப்பட்டு கடந்த 27.7.2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அரிய புகைப்படங்கள்

நினைவிடத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தவாறு அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்குள்ள நான்கு காட்சிக் கூடங்களில் கலாமின் மாணவப் பருவம், விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நினைவிடத்தை திறந்ததிலிருந்து சுமார் 1 கோடி பார்வையாளர்கள் வரையிலும் நினைவிடத்தை பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 17.03.2020 அன்று கரோனா பரவுவதை தடுக்கும் விதமாக ராமேசுவரத்திலுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்தை மூடுவதற்கு மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உத்தரவிட்டது.

ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோயில், அக்னி தீர்த்தக் கடற்கரை, மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஆகியவை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கலாம் நினைவிடத்தில் மட்டும் இன்னும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

மாணவர்கள் ஏமாற்றம்

இதனால் தினமும் ராமேசுவரத்துக்கும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடியாமலும் வாசலில் நின்றபடி மணிமண்டபக் கட்டிடத்தை மட்டும் ஏக்கத்துடன் பார்த்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

எனவே அப்துல்கலாம் நினை விடத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வழக்கம்போல் சென்றுவர மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in