

திருவாடானை அருகே இளைஞர் அமைப்பு ஒன்று ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என ஊரின் நுழைவுப் பகுதியில் பிளக்ஸ் போர்டு வைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி அஞ்சுகோட்டை அருகேயுள்ளது கரையக்கோட்டை கிராமம். இக் கிராமத்தில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்தின் நுழைவுச் சாலையில், அப்பகுதியில் செல்வோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகங்களோடு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் அனைவரும் வாக்களிப்போம், ஜனநாயகம் காப் போம், பணநாயகம் தவிர்ப்போம் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த போர்டை ‘அக்னிச்சிறகுகள் நண்பர்கள் குழு’ என்ற இளைஞர் அமைப்பு வைத்துள்ளது. இவ்வாசகங்கள் தேர்தலில் வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பலகை திருவாடானை-மங்களக்குடி சாலையில் அமைந்துள்ளதால் இப்பகுதி வழியாகச் செல்லும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அக்னிச்சிறகுகள் நண்பர்கள் குழு அமைப்பின் துணைச் செயலாளர் செல்லமுத்து கூறியதாவது, கலாமின் புத்தகமான அக்னிச்சிறகின் பெயரைக் கொண்டு சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என இந்த அமைப்பைத் தொடங்கினோம். வாக்களிப்பது ஜனநாயகக் கடமை, அதுபோன்று வாக்குக்குப் பணம் பெறக்கூடாது போன்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற பலகையை வைத்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளோம். வாக்குக்குப் பணம் வாங்காவிட்டால் நமது உரிமைகளை கேட்டுப்பெறலாம். வாக்குக்கு பணம் கொடுக்கும் நோக்கில் எந்த அர சியல் கட்சியும் இங்கு வரக்கூடாது என் பதற்காகவும் இந்த விழிப்புணர்வு பலகை வைத்துள்ளோம் என்றார்.