

கடந்த காலத் தேர்தல்களில் திரைப்பட நடிகர், நடிகைகள் பிரச்சாரத்துக்கு வருகிறார்கள் என்றாலே கூட்டம் அலைமோதும். இதை மனதில் வைத்தே தேர்தல் நேரத்தில் பிரபல நடிகர், நடிகைகளை தங்களின் பிரச்சாரத்துக்கு பிரதான கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளும். அந்தந்த நடிகர்களின் பிரபலத்துக்கேற்ப தொகையும் கொடுக் கப்படும்.
அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தில், இப்போதெல்லாம் தானாக கூட்டம் சேருவதில்லை. பணம் கொடுத்துத் தான் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.
பிரபல நடிகர், நடிகைகளை அழைத்து வரலாமென்றால், அவர்களுக்கு அதிக அளவு பணம் தர வேண்டியிருக்கும். இதனால், நடிகர், நடிகைகளாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் பணமும் அதிக அளவில் செலவாகக் கூடாது என நினைத்த கட்சியினர், தங்கள் கட்சியில் சேர்ந்து பொறுப்பு வகிக்கும் நடிகர், நடிகைகளை பிரச்சாரத்துக்கு அழைத்து வரத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், அதனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கூடுதல் செலவுதான் ஏற்படுகிறது.
சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்துக்கு அதிமுக சார்பில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவும், அமமுக சார்பில் குணச்சித்திர நடிகை சி.ஆர்.சரஸ்வதியும் பிரச்சாரம் செய்தனர்.
தானாகக் கூட்டம் சேரும் என எதிர்பார்த்த கட்சியினருக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. கடைசியில் அவர்களது கூட்டத்துக்கும் பணம் கொடுத்துத் தான் கட்சியினர் ஆட்களை அழைத்து வந்தனர்.
திரை நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு தனியாக ஒரு தொகை, அவர்களின் பேச்சைக் கேட்க ஆட்களைத் திரட்ட தனியாக ஒரு தொகை செலவழிக்க வேண்டியிருப்பதால், தேர்தல் பிரச் சாரத்துக்காக தங்கள் தொகுதிக்கு கட்சிப் பொறுப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் வராமல் இருப்பதே நல்லது என நினைக்கின்றனர் வேட்பாளர்கள்.