

தேச துரோக வழக்கை ரத்து செய்யக் கோரி பாடகர் கோவன் தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் கோவன் தாக்கல் செய்த மனு விவரம்:
டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிராக நான் பாடிய பாடல், 'வினவு' என்ற இணையதளத்தில் வெளியானது. இதைப் பார்த்த வேப்பேரி குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளர் நதியா அளித்த புகாரின் பேரில், போலீஸார் என்னைக் கைது செய்தனர். என் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த ஆதாரமும் இல்லாமல், இயந்திரத்தனமாக எனக்கு எதிராக வழக்கு பதிந்துள்ளனர். புகார் கொடுத்த உதவி ஆய்வாளர் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை. யாரையோ திருப்திபடுத்துவதற்காக புகார் கொடுத்திருக்கிறார்.
என்னைக் கைது செய்யும்போது, டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எதற்காக கைது என்றுகூட சொல்லவில்லை. எனக்கு சம்மன் அனுப்பியிருந்தால், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருப்பேன்.
பெண் உதவி ஆய்வாளர் பொய் புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி ஆர்.சுப்பையா இம்மனுவை விசாரித்து, மனுவுக்குப் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை டிசம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.