

தமிழகம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, உரிய நிவாரணத்தை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசால் கேட்டுப் பெற முடிந்ததா என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.
நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸை ஆதரித்து, நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி வாக்கு சேகரித்தார். அப் போது, அவர் பேசியதாவது:
நம் வீட்டு பிள்ளைகள் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் மருத்துக் கல்லூரிகளை கொண்டு வந்த கட்சி திமுக. ஆனால், தற்போது நம் பிள்ளைகளை மருத்துவம் படிக்க விடாமல் நீட் தேர்வைக் கொண்டு வந்த கட்சி பாஜக. நீட் தேர்வை ஆதரித்து வாக்களித்த கட்சி அதிமுக. இதனால், பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
மத்திய அரசுடன் ஒத்துப்போனால்தான் நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வர முடியும் என்கிறார் முதல்வர். ஆனால், தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.15,475 கோடி நிலுவைத் தொகையை அரசால் கேட்டு வாங்க முடியவில்லை. தமிழகம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசிடம் உரிய நிவாரணத்தைக் கேட்டுப் பெற முடிந்ததா? பிறகு எதற்காக அவர்களுடன் ஒட்டி உறவாட வேண்டும்?
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கரோனா ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், அதிமுக அரசு ரூ.1,000 தான் கொடுத்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீதியுள்ள ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
பிரச்சாரத்தில், எம்.பி செல்வராஜ், திமுக மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், சிக்கல் சென்ற கனிமொழி எம்.பி, கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்துவை ஆதரித்து, திருத்துறைப்பூண்டியில் கனிமொழி எம்.பி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர், “முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவும், பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதையும் தவிர அதிமுகவினருக்கு வேறு நோக்கம் இல்லை.
மத்திய அரசு தவறிழைக்கும்போது, அதை தட்டிக்கேட்கும் முதல் குரலாக தமிழகம் இருக்க வேண்டுமென்றால், ஸ்டாலின் முதல்வராக வாக்களிக்க வேண்டும்” என்றார்.