Published : 28 Mar 2021 03:19 AM
Last Updated : 28 Mar 2021 03:19 AM

உற்பத்தியாளர்களின் 20 ஆண்டுகால கனவு; புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமையுமா? - வெற்றி பெறும் வேட்பாளர் நிறைவேற்ற எதிர்பார்ப்பு

புதியம்புத்தூரில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில், சிறுமிகளுக்கான ஆடைகளை தயார் செய்யும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவில்பட்டி

புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைபூங்கா அமைக்க தேர்தலில் வெற்றிபெறும் கட்சி உறுப்பினர் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் விளங்குகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட இவ்வூரில் குடிசைத் தொழில் போல் திரும்பிய பக்கமெல்லாம் ஆயத்த ஆடை உற்பத்தி நடந்து வருகிறது. ஆயத்த ஆடை தயாரிக்கத் தேவையான மொத்த விற்பனை ஜவுளிக் கடைகள், பட்டன், நூல் கண்டுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் குடும்பங்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றன.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், சிறுமிகளுக்கான ஆயத்த ஆடை உற்பத்தியில் சிறப்புற்று விளங்கும் புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்க வேண்டும் என்ற உற்பத்தியாளர்களின் 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

முடக்கிய கரோனா

கரோனா பாதிப்பு ஆயத்த ஆடைதொழிலையும் விட்டு வைக்கவில்லை. சுமார் ஓராண்டு காலமாக உற்பத்தி ஏதுமில்லாமல் முடங்கி கிடந்தது. ஏற்கெனவே தயாரித்து வழங்கிய ஆடைகளுக்கும் பணம் வரவில்லை. புதிதாக ஆடைகளை தயாரிக்கவும் வழியில்லாமல் போய்விட்டது.

மத்திய அரசு மாவட்டம்தோறும் தையல் தொழிற் பயிற்சி மையம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு 4 ஆயிரம் சதுர அடியில் இடம் கொடுத்தால் போதும் என அந்த திட்ட இயக்குநர் தெரிவித்தார். புதியம்புத்தூர் பகுதியில் ஏராளமான அரசு இடங்கள் பயன்பாடற்று கிடக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒரு இடத்தை தையல் பயிற்சி பள்ளிக்கு ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என ஆயத்த ஆடைஉற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரயில் நிலையம் வேண்டும்

இதுகுறித்து புதியம்புத்தூர் ரெடிமேட் உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ஜெகதீசன் கூறியதாவது:

புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைதொழில் கோடிக்கணக்கில் நடந்துவருகிறது. சூரத்தில் இருந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்கிறோம். அவசர தேவைகளுக்கு மட்டுமே சென்னை, மதுரை, பெங்களூரூ போன்ற நகரங்களில் துணிகள் வாங்குகிறோம். சூரத் சென்று வர பெரும்பாலும் ரயிலில் தான் பயணம் செய்வோம்.

தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான், குளத்தூர், விளாத்திகுளம்,புதூர் வழியாக அருப்புகோட்டைக்கு புதிதாக அமைக்கப்படும் ரயில் பாதையில் உள்ள சில்லாநத்தத்தில் ரயில் நிலையம் அமைத்தால் இங்குள்ள வியாபாரிகளுக்கு ரயில் போக்குவரத்து எளிதாகும்.

முதலிடத்தை எட்டும்

கொல்கத்தா, நாக்பூர், இந்தூர், மும்பை போன்ற நகரங்களில் ஜவுளிகளை சந்தைப்படுத்த அம்மாநில அரசுகள் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளன. அதே போல், இங்குஆயத்த ஆடை சந்தை உருவாக்கி கொடுத்தால் இந்தியாவில் ஆயத்தஆடை உற்பத்தி மற்றும் விற்பனையில் புதியம்புத்தூர் மேலும் சிறப்புற்று விளங்கும்.

கடன் வந்து சேரவில்லை

ஆயத்த ஆடை உற்பத்தியாளர் களுக்கு தேவையான இயந்திரங்களை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கான இடம்தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கரோனா காலத்தில்ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு வங்கியில் இருந்து கடன் வழங்க மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால், கடன் தொகை இதுவரை எங்களுக்கு வந்து சேரவில்லை. ஆண்டுக்கு 30 லட்சம் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைளை நிறைவேற்ற வரும் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி வேட்பாளர் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x