

ஜோலார்பேட்டையில் காரில் அதிமுக சின்னம் பொறித்த டி-ஷர்ட்டுகள், துண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் கே.சி.வீரமணி உட்பட 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள தாமலேரிமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமாக கார் ஒன்று நிற்பதாக தேர்தல் பொது பார்வையாளர் விஜய் பஹதுர் வர்மா நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பார்த்துள்ளார். இது தொடர்பாக, அவர் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், குமரன் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று அந்த காரை சோதனை செய்தனர்.
அதில், அதிமுக சின்னம் பொறித்த 39 டி-சர்ட்டுகள், அதிமுக சிறிய துண்டுகள் 40, பாமக சிறிய துண்டுகள் 15 மற்றும் 21 ஆயிரம் அதிமுக ஸ்டிக்கர்கள், 1 அதிமுக கரைவேட்டி, 55 அதிமுக சின்னம் பொறித்த விசிறி, 346 அதிமுக துண்டுப் பிரசுரங்களை கைபற்றினர்.
இது தொடர்பாக ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் பறக்கும் படை அலுவலர் குமரன் புகார் அளித்தார். அதன்பேரில், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தேர்தல் குழு பொறுப்பாளர் அழகிரி (அமைச்சர் வீரமணியின் சகோதரர்), தனியார் பிரின்டிங் பிரஸ் உரிமையாளர், அமைச்சர் கே.சி.வீரமணி, காரின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் உட்பட 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், பிரின்டிங் பிரிஸ் உரிமையாளர், காரின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரின் விவரங்களை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.