ஆசியாவில் முதல்முறையாக ஒரே நேரத்தில் இளைஞரின் இதயம், கல்லீரல் மாற்றம்: சென்னை அப்போலோ டாக்டர்கள் சாதனை

ஆசியாவில் முதல்முறையாக ஒரே நேரத்தில் இளைஞரின் இதயம், கல்லீரல் மாற்றம்: சென்னை அப்போலோ டாக்டர்கள் சாதனை
Updated on
2 min read

ஆசியாவிலேயே முதல்முறையாக, திருச்செங்கோடு இளைஞருக்கு ஒரே நேரத்தில் இதயம், கல்லீரல் என இரண்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் செய்து சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னார் (30). முதுநிலை பொறி யியல் பட்டதாரியான இவர் அடிவயிற்றில் வலி, வீக்கம், சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். உடலும் மஞ்சள் நிறமாக மாறியது. கடந்த 8 ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் அவர், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது கல்லீரலில் இழை நார் வளர்ச்சி அதிகமானதால் கல்லீரல் செயலிழந்திருப்பதும், இதயத் தின் வலது பக்கம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து இதயம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர். மாற்று இதயம், கல்லீரலுக்காக காத்திருந்தனர். கடந்த அக்டோபர் மாதம் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக கிடைத்த இதயம், கல்லீரல் பொன் னாருக்கு பொருத்தமாக இருந்தது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரமேஷ், கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் காகர் தலைமை யில் என்.பிளாக் முறையில் பொன் னாருக்கு இதயம் மற்றும் கல்லீரலை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தினர். ஒரு வாரத்தில் பூரணமாக குண மடைந்த பொன்னார், மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிறுவனர், தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, துணை செயல் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, டாக்டர்கள் பால் ரமேஷ் கூறியதாவது:

பொன்னார் 8 ஆண்டாக அனுபவித்த வேதனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். ஆசியாவில் முதல் முறையாக என்.பிளாக் முறையில் இதயம் மற்றும் கல்லீரல் ஒரே நேரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடந்தது. மொத்தம் ரூ.40 லட்சம் செலவாகியுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல், இதயம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் அதிக அளவில் செய்யப்படுகின்றன. இதுபோன்ற மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு இன்னும் பலர் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதலில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துவிட்டு, அவர் குண மடைந்த பிறகு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதாக ஒரு திட்டம். தொடர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் முத லில் இதயத்தை மாற்றிவிட்டு, உடனடியாக கல்லீரலையும் மாற்றுவதாக இன்னொரு திட்டம். என்.பிளாக் முறையில் இதயம், கல்லீரல் என இரண்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் செய்யும் திட்டம். இவ் வாறு 3 திட்டங்கள் குறித்து மருத் துவக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். என்.பிளாக் முறையே சிறந்தது என்பதால் இதயம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச் சையை ஒரே நேரத்தில் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in