Published : 27 Mar 2021 10:17 PM
Last Updated : 27 Mar 2021 10:17 PM

கொளத்தூர் தொகுதியை ஒரு 'மாடல் தொகுதியாக' மாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் 

234 தொகுதிகளில் இந்த கொளத்தூர் தொகுதியை ஒரு 'மாடல் தொகுதியாக' மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் என்று திமுக தலைவரும் அக்கட்சி வேட்பாளருமான ஸ்டாலின் பேசினார்.

கொளத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றி அவர் பேசியதாவது:

வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்தக் கொளத்தூர் தொகுதியில் வழக்கம்போல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். இது நம்முடைய தொகுதி என்றே சொல்வேன்.

தேர்தல் அறிவித்த பின்னர் நான் வாக்கு சேகரிக்க இன்றுதான் வந்திருக்கிறேன். காரணம் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளுக்குச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன்.

எனவே காலம் தாழ்ந்து வந்ததற்காக நிச்சயம் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். அதனால்தான் முதலில் சொன்னேன் - இது நம்முடைய தொகுதி.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும்”. அதேபோல மற்ற தொகுதிகளுக்குச் சென்று வருவதால், இந்தத் தொகுதியில் எனக்கு மேலும் ஆதரவு அதிகமாகத்தான் இருக்கும்.

உங்களுக்குத் தெரியும். ‘நம்முடைய எம்.எல்.ஏ. – நம் வீட்டுப் பிள்ளை - ஊர் ஊராகப் பரப்புரைப் பயணத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் நம்முடைய தொகுதியைப் பற்றிக் கவலை இல்லை. இன்னும் சுற்றட்டும்’ என்றுதான் நீங்கள் சொல்வீர்கள்.

இருந்தாலும் எனக்கு மனது கேட்கவில்லை. சிலருக்குக் கோபம் வந்து விடும். அதற்குப் பயந்தே இப்போது வந்திருக்கிறேன். அவ்வாறு கோபம் வந்தாலும் அது உண்மையான கோபம் அல்ல, செல்லக்கோபம் தான் – உரிமை கலந்த கோபம் தான்.

எனவே அதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்போது வந்திருக்கிறேன். இந்தத் தொகுதியில் நான் எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, எப்படிப்பட்ட பணிகளை ஆற்றி இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும், இயற்கை பேரிடர்கள் எது வந்தாலும் உடனே வந்துவிடுவேன். கரோனா காலத்திலும் வந்தேன். எனவே வாரத்திற்கு இரண்டு முறை, மூன்று முறை உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு உண்டு.

இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை; நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். எந்தத் தொகுதிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு, இந்த கொளத்தூர் தொகுதிக்கு உண்டு. 234 தொகுதிகளில், முதல்வர் வேட்பாளர் தொகுதி இந்த கொளத்தூர் தொகுதி.

அதனால் எதிர்க்கட்சியாக இருந்து ஆற்றிய பணிகளை விட இன்னும் பத்து மடங்கு ஆளுங்கட்சிப் பொறுப்பை ஏற்று - முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பல பணிகளை நிறைவேற்ற முடியும்.

234 தொகுதிகளில் இந்த கொளத்தூர் தொகுதியை ஒரு 'மாடல் தொகுதியாக' மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அப்படி மாற்றுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கும் இருக்கிறது.

அதனால்தான் என்னை இவ்வளவு ஆசையாக, அன்போடு, பாசத்தோடு, வரவேற்று மகிழ்ந்து இருக்கிறீர்கள். எனவே உங்கள் வீட்டுப் பிள்ளை உங்களுக்காக ஓடியாடி உழைக்கும், உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய பணியைத் தொடர நீங்கள் எல்லாம் வரும் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்வதைவிட, உங்கள் வீட்டுப் பிள்ளையைத் தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, உங்களுக்குப் பணியாற்ற எங்களுக்கு உத்தரவிடுங்கள் என்று கேட்டு, உங்கள் அன்புக்கும் உற்சாகத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x