

மக்கள் பாதிக்கப்படும்போது வராத அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் எனப் பேசினார்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து புதுக்கிராமம் பகுதியில் அவர் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ”கோவில்பட்டியில் இன்று எதிர்பாராதவிதமாக திடீர் மழை பெய்தது. இதே போல் ஏப்.6-ம் தேதி வரும் மழையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உள்ள அழுக்குகளும், கசடுகளும் அடித்துச்செல்லப்படும்.
ஏற்கெனவே தமிழகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரட்டை இஞ்சின்கள் உள்ளன. இந்த இரண்டு இஞ்சின்களும் ரயில் தண்டவாளத்தைவிட்டே தமிழகத்தை தூக்கிவிட்டது. இது போதாது என டெல்லியில் இருந்து மோடி, அமித்ஷா என்ற இரட்டை இஞ்சின் வருகிறது. தமிழகத்தை பாதுகாப்பதற்கு இந்த இரண்டு இரட்டை இஞ்சினையும் தோற்கடிக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக அரசு தலையாட்டி பொம்மை ஆட்சி என்ற சாதனையே படைத்துள்ளது. குழந்தைகளுக்கு விளையாடும் தலையாட்டி பொம்மை போல், டெல்லியில் உள்ளவர்கள் கூறுவது போல் ஆடுகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மீது வரியை விதித்து கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் கோடியை மோடி அரசு வருவாயாக பெற்றுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரிகளைக் குறைத்து விலையைக் குறைப்பேன் எனக் கூறியிருப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் தொகுதியில் பிரதானமாக உள்ள தீப்பெட்டி தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதே போல், மோடி அரசு மற்றும் அதிமுக அரசின் தவறான கொள்கையால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு குறு தொழில் நசிந்து மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 65 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். இவ்வளவு பேர் வேலை கேட்டு காத்திருக்கும்போது, கடந்த 10 ஆண்டுகளாக வேலை கொடுப்பதற்கு எதுவும் செய்யாமல் தேர்தல் வரும் போது அதிமுக அரசு வேலை கொடுக்கிறேன் என சொல்லிக்கொண்டுள்ளது.
கடந்த ஓராண்டில் இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். அல்லது அவர்களது வேலை பறிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. வேலை வேண்டும் என்றால் தற்போது கடைபிடிக்கப்படும் கொள்கைகள் மாற வேண்டும். கொள்கைகள் மாற வேண்டுமென்றால் ஆட்சி மாற வேண்டும்.
இதே காலக்கட்டத்தில், ரூ.11 லட்சம் கோடி அதானி, அம்பானி வகையறாக்களுக்கு தள்ளுபடியாக கொடுத்துள்ளது. அவர்களுக்கு வரி வேண்டாம் எனவும் விலக்கி கொண்டுள்ளது.
இதுபோன்ற மோடி அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும், அதிமுக அரசு ஆதரித்துள்ளது. ஆனால், ஏழைகளுக்கு, விதவைகளுக்கு மற்றும் இதர வகைப்பட்டவர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களுக்கு சமூக பாதுகாப்பு கிடையாது.
அவர்களுக்கு எந்தவிதமான ஓய்வூதியமும் கிடையாது. இதனை கணக்கில் கொண்டு பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ள திமுகவின் தேர்தல் அறிக்கை உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
செங்கொடி இயக்கம் என்பது இந்திய நாட்டு அரசியலில் ஏழைகளுக்கு இடமில்லாத சூழலை எதிர்ப்பதற்காக செயல்பட்டுக்கொண்டுள்ளது. வேட்பாளர் சீனிவாசன் தனது வாழ்க்கையை இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள், தொழிலாளர்களுகாக அர்ப்பணித்துள்ளார். அவரது செயல்பாடு இன்று கடைபிடிக்கக்கூடிய கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகள், அரசியல் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.
அதிமுகவின் வேட்பாளர் 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும், 5 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் எத்தனை முறை தொகுதிக்குள் வந்துள்ளார். இங்கு உழைக்கும் மக்களை சந்தித்து அவர்களுடன் பேசி அவர்களது பிரச்சினைகள் எத்தனை முறை கவனித்திருப்பார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் அராஜகம், அதனுடன் படுமோசமான சுற்றுச்சூழல் பாதிப்பால், பாதிக்கப்பட்ட மக்கள் போராடியபோது, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதால், 13 பேர் பலியானபோது, அமைச்சர் எங்கு இருந்தார். போராட்டம் நடத்திய மக்களை சந்தித்து ஆதரவளித்தாரா?
சாத்தான்குளம் தந்தை, மகன் மிகக்கொடுமையாக லாக்கப்பில் சித்ரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடம் அதிமுக அரசு காவல்துறை சொன்னதை கேட்டுக்கொண்டு அதனை நியாயப்படுத்தியது. ஆனால், உண்மையில் இந்த பாதிப்பு காரணமாக காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது.
இந்த சம்பவம் நடந்தவுடன் செங்கொடி இயக்கத்தினரும், கனிமொழி எம்.பி.யும் தான் ஓடிச்சென்றனர். இப்படி மக்கள் பாதிக்கப்படும்போது பக்கத்தில் வராதாவர்களை, மீண்டும் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க அனுமதிக்கலாமா. அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.
இந்த தொகுதியில் மற்றொரு ஜென்டில்மேன் களத்தில் இருக்கிறார். அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து அங்கு வந்துள்ளார். அவர் எதற்காக அங்கிருந்து வந்துள்ளார். அந்த தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகளை எத்தனை நிறைவேற்றி உள்ளார். அவர் எத்தனை முறை சட்டப்பேரவைக்கு சென்றார் என யாராவது கேட்டுள்ளீர்களா.
கோவில்பட்டி தொகுதியில் பிரச்சினைக்கு எல்லையே கிடையாது. பிரச்சினைகள் வரும்போது சென்னையில் இருந்து தினகரன் இங்கு ஓடி வருவாரா. ஆனால், நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனைப் போல் டி.டி.வி.தினகரனால் வரமுடியாமா?. தினகரனின் சித்தி சசிகலாவே போட்டியில் இல்லையென ஒதுங்கிக்கொண்டார்.
வெற்றி பெற்ற பின்னர் நான் தொகுதிக்கு வரமாட்டேன், எனது நண்பர் பார்த்துக்கொள்வார் என கோவில்பட்டி தொகுதி மக்களை அவமானப்படுத்துகிற இவரைப் போன்றவர் தொகுதிக்கு வேண்டுமா என எண்ணிப் பார்க்க வேண்டும்.
பணத்தை வைத்து எம்.எல்.ஏ. என்ற மிக உயர்ந்த பொறுப்பை விலைவாங்கி, தொகுதி மக்களை சந்திக்க மாட்டேன், எனது நண்பர் பார்த்துக்கொள்வார் என்பவரை இந்தத் தொகுதி வரவேற்க வேண்டுமா.
சீனிவாசன் எந்த நேரமும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடன் இருப்பார் என்பது மட்டுமல்ல, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சட்டப்பேரவையில் எடுத்து வைத்து வாதாடுவார், போராடுவார் என்ற உறுதியை வழங்குகிறோம். இன்றைக்கு மோசமான அரசியலுக்கு ஒரு மாற்று அரசியல், ஊழல் சாம்ராஜ்யத்தை தகர்த்து எறிந்து, மக்களுக்காக போராட்டத்தை ஒரு மாற்றாக எடுத்து வைப்பதையும் அவர் செய்வார். அவரை பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார் அவர்.
தொடர்ந்து கயத்தாறில் பிரச்சாரம் மேற்கொண்டார்.