

மதுரையில் கடந்த ஒரு வாரமாக அமிலம் ஊற்றப்பட்ட காயத்துடன் இரண்டு மாடுகள் வலியுடன் பரிதாபமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றன.
இதுபோன்று மதுரையில் சமீப காலமாக தெருநாய்கள், மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் மீது மனிதநேயமே இல்லாமல் தாக்குதல் தொடர்வதால் விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மதுரையில் சமீபத்தில் ஒரு தெருநாயை 500 ரூபாய் கொடுத்து ஆள் வைத்து கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விலங்குகள் நலஆர்வலர்கள் கொடுத்த புகாரால் மதுரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து தெருநாயை அடித்துக் கொன்ற 2 பேரை கைது செய்தனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் அடங்குவதற்குள், தற்போது கடந்த சில நாட்களாக சூர்யா நகர்ப் பகுதியில் 2 மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் ஊற்றி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
அந்ந மாடுகள் வலியால் துடிதுடித்தப்படி சிகிச்சைபெறாமல் மோசமான நிலையில் சூர்யா நகர் குடியிருப்புப் பகுதிகளில் பரிதாபமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றனர்.
மாடுகளில் ஏற்படுத்தப்பட்ட அந்தக் காயம் மிகவும், ஆழமானதாக உள்ளன. இந்த மாடுகள் சரியான தகுந்த சிகிச்சை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன.
மாடுகளின் நிலைமை அறிந்த அப்பகுதி குடியேற்றவாசிகள் அரசு கால்நடை மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மாடுகளை மீட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
தற்போதும் அந்த மாடுகள் காயத்துடன் சுற்றிதிரிவதால் மதுரையில் விலங்குகள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் விலங்குகள் மீதான மனிதநேயம் மரத்துப்போய்விட்டதாகவே கருதுவதாக அதன் ஆர்வலர்கள் அதிருப்தியடைந்து்ளளனர்.
மாடுகளை மீட்டு சிகிச்சை அளிக்கவும், அதன் மீது ஆசிட் அடித்தவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விலங்குகள் நல ஆர்வலர் மாரிக்குமார் கூறுகையில், ‘‘2 மாடுகள் மட்டுமில்லை, 5, 6 மாடுகள் மீது யாரோ ஆசிட் அடித்துள்ளனர். விலங்குகள் மீதான ஏதோ ஒரு கோபத்தில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் கால்நடைத்துறை, மாநகராட்சித்துறை வாகனங்களை எடுத்து வந்து மாடுகளை மீட்டு சிகிச்சை எடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு பணி நெருக்கடி இருக்கலாம், அதற்காக அந்த மாடுகளை மீட்டு சிகிச்சை அளிக்காமல் அப்படியே விடுவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது, ’’ என்றார்.