எனது போன் டேப் செய்யப்படுவதாக சந்தேகிக்கிறேன்; நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: டி.ஆர்.பாலு புகார்

எனது போன் டேப் செய்யப்படுவதாக சந்தேகிக்கிறேன்; நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: டி.ஆர்.பாலு புகார்
Updated on
1 min read

தனது போன் டேப் செய்யப்படுவதாக சந்தேகிப்பதாகவும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டேப் செய்யப்படுவது உறுதியானால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமைச் செயலருக்கும், தொலைத்தொடர்புத் துறைச் செயலருக்கும் புகார் அளித்துள்ளார்.

சட்டப்பேரவை வாக்குப்பதிவு நெருங்கி வரும் நேரத்தில் கட்சிகள் பிரச்சாரம் வேகமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. மேலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மத்திய அரசும், மாநில அரசும் செயல்பட விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தனது போன் டேப் செய்யப்படுவதாக தலைமைச் செயலருக்கும், தொலைத்தொடர்புத் துறைச் செயலருக்கும் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், “எனது செல்போன் எண், எனது லேண்ட்லைன் போன் நம்பர்கள் டேப் செய்யப்படுவதாக கடுமையாக சந்தேகப்படுகிறேன். என் போனை சட்டவிரோதமாக டேப் செய்வதைக் கைவிடுமாறு கோரிக்கை வைக்கிறேன். ஒருவேளை என்னுடைய அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விதமாக டேப் செய்வது தொடர்ந்தால் சட்டரீதியான தீர்வைக் கோரி அதைக் கட்டுப்படுத்த நீதிமன்றத்தை அணுகுவேன்” என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தொலைத்தொடர்புத் துறைச் செயலருக்கும் தகவல் அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in