

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கருணாநிதியின் நல்லாட்சியே காரணமாகும் என்று ஓசூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா புகழாரம் சூட்டினார்.
ஓசூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது: திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக உருவானதே திமுக கட்சி.
அண்ணாதுரை தமிழகத்தில் திமுக கட்சியின் முதல் முதல்வராகப் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து நீண்டகாலமாக முதல்வராக இருந்த கருணாநிதியின் நல்லாட்சியே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாகும்.
பாஜகவினால் தொன்னிந்தியாவில் வளர்ச்சியடைய முடியவில்லை. கர்நாடகாவில் கூட நேரடி தேர்தல் மூலமாக பாஜக ஆட்சிக்கு வரவில்லை. ஆபரேஷன் கமலா மூலமாக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக வருவதற்கு வாய்ப்பு அளிக்காத தமிழக மக்களுக்கு கோடி கோடி வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது அதிமுக தோளில் அமர்ந்து பாஜகவினர் வெற்றி பெற முயற்சிக்கின்றனர். நீங்கள் அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமமாகும். ஆகவே தமிழக மக்கள் பாஜகவுக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் வாக்களிக்காமல் படுதோல்வியடையச் செய்யவேண்டும்.
இந்து - முஸ்லிம் இடையே கலகத்தை ஏற்படுத்தி நாட்டை ஆட்சி செய்கிறது பாஜக. பிரதமர் மோடி பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளார். சுதந்திர இந்தியாவில் வரலாற்றிலேயே அதிகமாக பொய் சொல்பவர் ஒருவர் உண்டென்றால் அது மிஸ்டர் மோடி ஒருவர் மட்டுமே. கருப்பு பணத்தை கொண்டு வந்து நாட்டிலுள்ள ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுகிறேன் என்றார்.
அதைச் செய்யவில்லை. கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன் என்றார். அதையும் செய்யவில்லை. டெல்லியில் 120 தினங்களை கடந்து விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது.
இதுவரை 200 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டிலுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள், மாணவர்கள் என யாரைப்பற்றியும் மோடிக்கு கவலையில்லை. மாறாக அம்பானி, அதானி ஆகிய பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்.
நாட்டில் பெட்ரோல் , டீசல், காஸ் மற்றும் காய்கறி விலைகள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க வேண்டும். ஓசூரில் திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடைய செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தளி தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக சித்தராமையா பிரச்சாரம் செய்தார். இந்த இரு கூட்டங்களிலும் சித்தராமையா கன்னட மொழியில் பேசி வாக்கு சேகரித்தார்.
இந்தப் பிரச்சார கூட்டங்களில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், ராமலிங்கரெட்டி, ஜமீர்அகமது, காங்கிரஸ் கட்சி கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், ஓசூர் தொகுதி வேட்பாளர் ஒய்.பிரகாஷ், தளி தொகுதி வேட்பாளர் டி.ராமச்சந்திரன், ஓசூர் எம்எல்ஏ சத்யா உட்பட கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.