

திருமங்கலம் தொகுதியில் தேர்தலை சீர்குலைக்க எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சதி செய்வதாக அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதரவாளர்களுடன் 30 கிலோமீட்டர் நடைபயணம் சென்றார்.
அப்போது, அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனையை விளக்கியும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைய விதிகளை மீறி பல்வேறு சதி செயல்களை செய்து அதன் மூலம் அமைதியான முறையில் நடைபெறும் தேர்தலை சீர்குலைக்க சதி செய்வதாகக் கூறியும் ஆர்.பி.உதயகுமார் இந்த நடைப்பயணம் மேற்கொண்டார்.
டி. கல்லுப்பட்டியில் தொடங்கிய இந்தப் பிரச்சார நடைபயணம் டி. குன்னத்தூர் அம்மா கோயில், கள்ளிக்குடி, திருமங்கலம் வழியாக சென்று கப்பலூரை அடைந்து நிறைவுபெற்றது.
தொடர்ந்து அவர் எதிர்க்கட்சிகள் மீதான புகார் மனுவினை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திருமங்கலம் தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் அமைதியை சீர்குலைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட சதி திட்டம் தீட்டி உள்ளனர்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்தக்கோரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதிமுக அரசின் சாதனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திமுக மிகப்பெரிய தடையாகவும் தடுப்பு வேலியாகவும் உள்ளது.
அதிமுக அரசின் சாதனையை திமுக மறைக்க நினைப்பது வானத்தை போர்வையைக் கொண்டு மூடுவதை போல் முட்டாள்தனமானது.
அதிமுக தோற்க வேண்டும் என்று திருமங்கலம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட ஆள் கிடைக்காமல் குற்ற வழக்குகளில் பின்னணியில் உள்ள நபரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சியின் சதியை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்’’ என்றார்.