

ஓட்டுப் போட்டால் உங்கள் வீட்டில் நல்லது நடக்கும். அந்த நல்லது தாமரை மீது அமர்ந்துதான் வரும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று (27-ம் தேதி) கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, ''ஓட்டுப் போடுவது வெறும் கடமை மட்டும் அல்ல. அது புண்ணிய காரியம் ஆகும். அந்தப் புண்ணிய காரியம் செய்தால், அதற்கு உண்டான பலன் எப்படி இருக்கும் என்றால், உங்கள் வீட்டில் நல்லது நடக்கும். அந்த நல்லது தாமரை மீதுதான் அமர்ந்து வரும். அதே சமயம், டார்ச் லைட்டைப் பிடித்துக்கொண்டு வராது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு அரசியல் என்பது ஒரு சேவை. அந்த மனப்பான்மையின் மூலமாகத்தான் நாங்கள் அரசியலை அணுகுகிறோம்.
2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போது, நாடாளுமன்றத்தின் படியை அவர் தொட்டு வணங்கினார். அதேபோல் பிரதமர், தன்னை ஒரு பிரதான சேவகனாகத்தான் முன்னிறுத்திக் கொண்டு இருக்கிறார். எனவே, பாஜகவினராகிய எங்களுக்கு அரசியல் என்பது ஒரு சேவைதான்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்களின் ஜன்தன் வங்கிக் கணக்கில் தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிதியுதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதிலும் பெரும்பாலான பயனாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுவே, திமுக ஆட்சிக் கட்டிலில் இருந்தால், இந்தத் தொகை முறையாக மக்களுக்குச் சென்றயுடைமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்'' என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
அப்போது வேட்பாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.