நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?- கமலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால்

நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?- கமலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால்
Updated on
1 min read

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என, மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று (27-ம் தேதி) கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இருசக்கர வாகனத்தை ஓட்டி, பொதுமக்களிடம் அவர் வாக்குச் சேகரித்தார்.

பின்னர், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குஜராத் சமாஜ் கலையரங்கில் நடந்த ஹோலி விழாவில் கலந்துகொண்டு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்குமாறு அங்கிருந்த குஜராத், ராஜஸ்தான் மற்றும் இதர வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம் செய்தார்.

அப்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, ‘‘பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, அதற்குண்டான தீர்வுகளை வழங்குவது, ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல், திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நான் சவால் விடுகிறேன்.

பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு அளிக்கும் வாக்குகள் வளர்ச்சிக்கு உண்டான ஓட்டு. ஏழை, எளிய மக்களை, அவர்களின் வறுமையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான ஓட்டு. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

காலைக் கடன்களைக் கழிக்க பெண்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர். அதைச் சரிசெய்ய கோடிக்கணக்கிலான கழிப்பறைகளை நாடு முழுவதும் கட்டிக் கொடுத்துள்ளார். அதில் பெரும் பங்கு பயனாளிகள் தமிழகத்தில் உள்ளனர்.

அதேபோல், கரோனா காலகட்டத்தில் 8 மாதங்களுக்குப் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், தேர்தலின்போது பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல், இளைஞர்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ள மற்ற இளைஞர்களுக்கும் தெரிவித்து அவர்களை பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்’’ என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in