

பெண்கள் குறித்து திமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அக்கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரும், சுற்றுச்சூழல் அணி செயலருமான கார்த்திகேய சிவசேனாபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டு மாட்டுப் பாலையும், பெண்களையும் இணைத்து திண்டுக்கல் லியோனி அப்படி பேசியிருக்ககூடாது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசின் இலவசங்களால்தான் பலரும் முன்னுக்கு வந்துள்ளோம். தமிழக அரசு மூலம் விலையில்லா சைக்கிள், லேப்டாப், பஸ் பாஸ், உணவு ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு பலவிதங்களில் மக்கள் மறைமுகமாக வரி செலுத்துகின்றனர். அந்த வரிப்பணத்தை ஒரு நல்ல அரசாங்கம் சாமானிய மக்களுக்கு எப்படி திருப்பி அளிக்கிறது என்பதுதான் சமூக நீதி. அப்படி திருப்பி அளிப்பதற்காகத்தான் அரசு திட்டங்களை கொண்டு வருகிறது.
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது உரிமைத்தொகை. பெண்கள் மாதந்தோறும் அரசுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் மறைமுக வரி செலுத்துகிறார்கள். அவர்கள் நாம் ஏதும் திருப்பி செலுத்துவதில்லை. மறைந்த முதல்வர்கள் அண்ணா, காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா வரை நம்மை நன்றாக வைத்திருந்தனர். நாங்கள் இன்று எதிர்ப்பது அதிமுகவை அல்ல. அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகத்தைத்தான்.
கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தனியாருக்கு அளியுங்கள் என்கின்றனர். மக்களிடம் பெறப்பட்ட வரிப்பணத்தில்தான் மன்னர்கள் கோயில்களை கட்டினர். இந்த கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்குமே தவிர, எச்.ராஜா, எஸ்.வி.சேகர், கே.டி.ராகவன் போன்றோர் கோயில் தர்மகர்தாவாக நாங்கள் விடமாட்டோம். கோயிலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காககத்தான் அவை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.