

திமுகவைப் போன்று வாரிசு அரசியல் செய்யும் கட்சி நாட்டுக்கு நல்லதல்ல என்று திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை, நாங்குநேரி தொகுதி வேட்பாளர் கணேசராஜா, பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் ஜெரால்டு ஆகியோரை ஆதரித்து பணகுடி, நாங்குநேரி, மேலப்பாளையம் குறிச்சி பகுதிகளில் முதல்வர் பழனிசாமி இன்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
திமுகவில் கருணாநிதிக்குப்பின் ஸ்டாலின், ஸ்டாலினுக்குப்பின் உதயநிதி வந்துள்ளார். இதுபோன்ற வாரிசு அரசியல் நாட்டுக்கு நல்லத்தல்ல. திமுக ஒரு குடும்பக் கட்சி.
தமிழகத்தில் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கட்சியில் உயர் பதவிக்கு வருவார்கள். மத்தியில் ஆட்சியில் பங்குவகிக்கும்போதும் அமைச்சர் பொறுப்பை அவரது குடும்பத்தினர்தான் பெறுவார்கள். ஆனால் அதிமுகவில் உழைத்தால் முதல்வர் உள்ளிட்ட எந்த பதவிக்கும் வரமுடியும்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். விவசாயிகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அதிமுக அரசின் திட்டங்கள்தான் காரணம். குடிமராமத்து திட்டத்தால் மழை நீர் வீணாகவில்லை. வருண பகவான் கருணையால் ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பியுள்ளன.
கடவுளும் நம்ம பக்கம், இயற்கையும் நம்ம பக்கம். நமது ஆட்சி வருவதற்கு இயற்கை நமக்கு சாதகமாக இருக்கிறது. நீர்நிலைகள் நிரம்பியதால் அதிக விளைச்சல் இந்த ஆண்டு கிடைத்திருக்கிறது.
இதற்காக நாட்டிலேயே உயரிய விருதைப் பெற்றுள்ளோம். இதுபோல் நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தியதற்காகவும் தேசிய விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.
ஒரு பள்ளி மாணவன் சிறந்த மாணவராக இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ள தேர்வு வைப்பதுபோல் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்து சிறந்த மாநிலங்களுக்கு விருது வழங்குகிறது.
அவ்வாறு அதிகமான விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் அதிகமான கல்லூரிகளை நாங்கள் திறந்துள்ளோம். 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தொடங்கினோம். நாட்டிலே எங்கும் இதுபோல் கிடையாது. இது மிகப்பெரிய சாதனை.
கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் 3 தொடங்கப்பட்டுள்ளது. கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
திமுக ஆட்சியில் மின்வெட்டால் இருண்டு கிடந்தது. ஆனால் தற்போது நாட்டிலேயே மின்மிகை மாநிலம் தமிழகம். இதனால் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகிறது. தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளோம். அதிமுக அரசு எதில் குறைந்தது என்று எதிர்க்கட்சி தலைவர் கூறமுடியுமா.
தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களிலும் நான் கலந்து கொண்டேன். இதுவரை தமிழக முதல்வர் யாரும் இவ்வாறு இருந்ததில்லை. அந்தப் பெருமை எனக்குக் கிடைத்துள்ளது. தமிழகம் வெற்றிநடை போடுகிறது.
ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது திமுக. அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது 13 அமைச்சர்கள் மீது வழக்கு போட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால் அதிமுகமீது திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறார். ரோடு போடவில்லை, அதற்கு பணமும் ஒதுக்கவில்லை. ஆனால் ஊழல் என்று ஆளுநரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
மக்களைக் குழப்பி மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வர துடிக்கிறார். அவர் மக்களிடம் பொய் பேசி வருகிறார். இதை மக்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.